3 நாடுகளை அதிர வைத்த மோசடி சம்பவம்..!! எந்தெந்த நாடுகள்?
சிங்கப்பூர்:எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூரர்கள்,தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காவல்துறை தெரிவித்ததாவது,இருவரும் 44 வயதுடையவர்கள் மற்றும் தற்போது மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்.
அவர்களில் ஒருவரை தாய்லாந்தின் பாங்காக்கில் காவல்துறை சோதனையின் போது கைது செய்தது. அவர் மியான்மரில் அரசு அதிகாரிகளைப் போல நடித்து, சிங்கப்பூரர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட எல்லை தாண்டிய மோசடி கும்பலின் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளில், அவர் மியான்மரில் உள்ள மோசடி மையத்தின் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. மியான்மர் அதிகாரிகள் அந்த மையத்தை சோதனை செய்ததும், அவர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தாய்லாந்து காவல்துறையின் உதவியுடன் அவர் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளுக்காக தனது உள்ளூர் வங்கிக் கணக்கை குற்றவியல் கும்பலிடம் ஒப்படைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு நபர் கம்போடிய காவல்துறையினரால் க்ராங் பாவெட்டில் கைது செய்யப்பட்டார். அவர் எல்லை தாண்டிய தொலைபேசி மோசடிகளில் ஈடுபட்டதாகவும், மோசடி கும்பலுக்கான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். மேலும், மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பணத்தைப் பெற அவரது வங்கிக் கணக்குகளும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.