சிங்கப்பூர் விலங்கு நல காப்பகத்தின் மீது அதிகாரிகள் எடுத்த கடும் நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முக்கிய விலங்கு நல அமைப்பான Animal Lovers League (ALL), தவறான நிர்வாகம் மற்றும் நீண்டகால வாடகை நிலுவை காரணமாக, சுங்கை தெங்காவில் உள்ள The Animal Lodge வசதியில் இருந்து இடம் காலி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) கீழ் செயல்படும் Animal & Veterinary Service (AVS) அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த தளம், விலங்கு நலக் குழுக்கள் மற்றும் சுயாதீன தங்குமிடங்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ALL, “No Kill Policy” (விலங்குகளை கொல்லக்கூடாது என்ற கொள்கை) கடைபிடிப்பதற்காக அறியப்படுகிறது. அங்கு 500க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பராமரித்த இந்த அமைப்பு தற்போது சுமார் 170 நாய்களையும் பூனைகளையும் காப்பாற்றி வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் தன்னார்வலர்களிடமிருந்து விலங்குகளின் நலனில் சீர்கேடு ஏற்பட்டதாக புகார்கள் வந்தன. ஆய்வின் போது, அழுக்கான கூண்டுகள், ஆரோக்கியமற்ற சூழல், மற்றும் தாமதமான மருத்துவ சிகிச்சைகள் போன்ற பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. இதன் பின்னர், AVS அமைப்பு ஏழு எச்சரிக்கைகள் மற்றும் இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது. இருப்பினும், நிலைமை திருந்தாததால், அதிகாரிகள் ALL அமைப்பின் குத்தகையை புதுப்பிக்க மறுத்தனர்.
மேலும், அமைப்பு 50 மாதங்களுக்கும் மேலாக வாடகை கட்டணத்தை செலுத்தாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக, The Animal Lodge வசதியை விட்டு விலக உத்தரவிடப்பட்டுள்ளது.