மொபைல் கேம் தோல்வியால் ஆத்திரம்.. 11 வயது சிறுவனுக்கு மூளையதிர்ச்சி!

மொபைல் கேம் தோல்வியால் ஆத்திரம்.. 11 வயது சிறுவனுக்கு மூளையதிர்ச்சி!

சிங்கப்பூரில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற விருந்தில், 11 வயது சிறுவன் மற்றொரு சிறுவனால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஹாலோவீன் விருந்தில் சிறுவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். அப்போது மொபைல் விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவன் ஆத்திரமடைந்து, விளையாட்டில் பங்கேற்காத 11 வயது சிறுவனைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட சிறுவன் அதிர்ச்சியடைந்ததாகவும், வீட்டிற்குத் திரும்பிய பின்னரே நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுவனின் முகத்தில் வீக்கமும் மூக்குப் பகுதியில் காயங்களும் இருந்ததைக் கண்ட அவரது தாயார் கவலையடைந்தார். உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்ததுடன், மகனை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றார்.

இதற்கிடையில், நவம்பர் 3ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் சிறுவனுக்கு மூளையதிர்ச்சி (Concussion) ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தலைவலி மற்றும் தலைச்சுற்றல் இருப்பதால், அவரது உடல்நிலையைத் தாய் கவனித்து வருகிறார். மேலும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட சிறுவன் பின்னர் மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த மன்னிப்பில் உண்மையான வருத்தம் வெளிப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

மொபைல் விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியால் சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல், மருத்துவமனை வரை சென்றிருப்பது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.