குடும்பத்தினர் கவலை..!!!தாய்லாந்தில் சிக்கிய சிங்கப்பூரர்கள் மீட்கப்படுவார்களா..??
சிங்கப்பூர்: தாய்லாந்தின் ஹாட் யாய் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால், பல சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் அங்கு உள்ள ஹோட்டல்களில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
மின்சாரம், உணவு, தண்ணீர் இல்லாமல் பல நாட்களாக துயரத்தில் தவித்துவரும் அவர்கள், எப்போது வீட்டுக்கு திரும்ப முடியும் என்பது தெரியாத நிலையிலுள்ளனர்
69 வயதான டெலிவரி டிரைவர் டான் சின் சாய் மற்றும் அவரது ஆறு நண்பர்கள் கடந்த மூன்று நாட்களாக ஒரு ஹோட்டலில் சிக்கிக் கொண்டுள்ளனர். ஹோட்டல் சுற்றியுள்ள நீர் ஆறு அடி உயரத்தில் உள்ளது என்பதால், வெளியேற முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால், இரவில் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ளது. பேட்டரியைச் சேமிக்க அவர் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் கைப்பேசிகளை அணைத்துவிட்டனர்.
“நாங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறோம், விமான நிலையத்திற்குச் செல்ல விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். அவரது மகள் விவியன் டான், வீடியோ அழைப்பில் தனது தந்தை தண்ணீரைக் கொதிக்க வைப்பதை பார்த்ததாக தெரிவித்தார். “அவர்கள் இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. எப்போது உணவு கிடைக்கும் என்பதையும் யாரும் சொல்லவில்லை,” என்று அவர் கூறினார்.
மற்றொரு சிங்கப்பூரர்,74 வயதான நீரிழிவு நோயாளி, ஹோட்டலில் உயிர்வாழ முட்டைகளுக்காக பிச்சை எடுக்க வேண்டியதாக தனது மகளிடம் கூறியுள்ளார். “உணவு வழங்கியபோது,மக்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதாகவும் இதனால் லாபியில் குழப்பம் நிலவியது என்று அவர் கூறியுள்ளார்.
மற்றொரு பயணி ஆன 74 வயது ரோனி டோ உள்ளூர் வாசி ஒருவரின் உதவியுடன் மீட்கப்பட்டார். அந்த நபர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் உடை வழங்கினார்.
இந்நிலையில் சுற்றுலா சென்று மழை வெள்ளத்தால் சிக்கிய சிங்கப்பூரர்கள் எப்பொழுது வீடு திரும்புவார்கள் என்று குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.