சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தங்குவதற்காக தனது பிலிப்பைன்ஸ் காதலியை பணிப்பெண்ணாக பொய்யாக வேலைக்கு அமர்த்திய சிங்கப்பூரருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
45 வயதான ஃபைசல் ஃபரிட் 2021 ஆம் ஆண்டு சோட்டோ ஜென்னி வில்லரோன் என்ற பிலிப்பைன்ஸ் பெண்ணை சந்தித்து டேட்டிங் செய்தார். அப்போது ஜென்னி சிங்கப்பூரில் செல்லுபடியாகும் அனுமதியுடன் பணியாற்றிய வெளிநாட்டு வீட்டு உதவியாளராக இருந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தனது முதலாளி வேலையை நிறுத்துவதாக கூறியதால், சிங்கப்பூரில் சட்டபூர்வமாகத் தங்குவதற்காக ஃபைசலை தன்னை பணியமர்த்துமாறு ஜென்னி கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் ஃபைசல் மறுத்தாலும், பின்னர் அவளுக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
அதன்படி, பிப்ரவரி 28 அன்று அவர் ஜென்னியை வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியதாக விண்ணப்பித்தார். மனிதவள அமைச்சகம் அதை அங்கீகரித்ததன் பேரில், மார்ச் 9 அன்று ஜென்னிக்கு வேலை அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், மார்ச் முதல் ஜூலை வரை ஜென்னி வாரத்தில் நான்கு முதல் ஐந்து இரவுகள் ஃபைசலின் வீட்டில் தங்கியிருந்தாலும், எந்தவித வீட்டு வேலைகளும் செய்யவில்லை. அரசு தரப்பு, அவள் அவரது “காதலி”யாக மட்டுமே வாழ்ந்ததாக தெரிவித்தது.
மீதமுள்ள நாட்களில், ஜென்னி பகுதி நேர ஆயாவாக வேறு இடத்தில் வேலை செய்தார். இந்த நிலைமை குறித்து ஃபைசல் முழுமையாக அறிந்திருந்தார். மேலும் அவளுக்கு சட்டவிரோதமாக வேலை செய்ய அனுமதித்தார்.
அரசு தரப்பு, இந்த செயலால் வெளிநாட்டு தொழிலாளர் அமைப்பின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டதாகக் கூறி நான்கு வார சிறைத் தண்டனையை கோரியது. ஆனால், நீதிமன்றம் மூன்று வார சிறைத்தண்டனையே விதித்தது.
வழக்கறிஞர் கூறுகையில், ஃபைசல் விவாகரத்திற்குப் பிறகு தனது மகனை தனியாக வளர்த்து வந்தவர்.குறைந்த வருமானத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்தவர். அவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல, காதலியின் கோரிக்கைக்கு பாசத்தின் பேரில் உதவியதாகவும் வாதிட்டார்.