HDB வீடுகளில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை..!! தனி வாழ்வு புதிய போக்கா..?
சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேசமயம், குடும்ப அளவுகள் குறைந்து, தனியாக வசிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.
HDB வெளியிட்ட 2023/24 கணக்கெடுப்பின்படி, HDB குடியிருப்புகளில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் 2018 இல் 3.15 மில்லியனிலிருந்து 2023 இல் 3.18 மில்லியனாக உயர்ந்துள்ளனர். அதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் 18.2% ஆக அதிகரித்துள்ளது.இது 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இருமடங்கு உயர்வாகும்.
வீட்டுக் குடும்பங்களின் சராசரி அளவு 2018 இல் 3.1 இலிருந்து 3 ஆக குறைந்துள்ளது. ஒற்றை நபர் வீடுகள் 13% இலிருந்து 16% ஆக உயர்ந்துள்ளன.
கணக்கெடுப்பில் 80% க்கும் மேற்பட்ட முதியோர் தங்கள் தற்போதைய HDB வீட்டிலேயே ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினர் அல்லது பராமரிப்பாளர்களின் உதவியுடன் வாழ விரும்புகிறார்கள்.
அதே நேரத்தில்,இளம் ஒற்றை குடியிருப்பாளர்களில் 80% க்கும் மேற்பட்டோர் திருமணத்திற்குத் தெளிவான திட்டம் இல்லாமல் பெற்றோருடன் வசிக்கின்றனர். இவர்களில் பலர் எதிர்காலத்தில் BTO (Build-To-Order) வீடுகள் வாங்கி தனியாக வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1968 முதல்,HDB ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த மாதிரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.மக்களின் தேவைகள் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை மதிப்பிடும் நோக்கில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.