மனநல நிபுணர்கள் கவனத்திற்கு ..!!! புதிய சட்டம் டிசம்பர் 31 முதல் அமல்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு முக்கியமான சட்ட மாற்றத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் குற்றவியல் வழக்குகளில் சாட்சியமளிக்க விரும்பும் மனநல மருத்துவர்கள், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
புதிய குற்றவியல் நடைமுறை (நிபுணர் கருத்து) விதிகள் 2025 மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டத் திருத்தங்கள் இந்த மாத இறுதியில் அமலுக்கு வருகின்றன.இதன் மூலம் குற்றவியல் விசாரணைகளில் நிபுணர் சாட்சியங்கள் வழங்கும் விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்படுகின்றன.
மனநல நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உச்சநீதிமன்ற நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரி அடங்கிய குழுவிடம் இருக்கும். தகுதி வாய்ந்த மனநல மருத்துவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 28 வரை நீதிமன்ற நியமனத்திற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நியமிக்கப்பட்ட மனநல மருத்துவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் வழக்கறிஞர்கள் தகுதியான நிபுணர்களை எளிதில் கண்டறிந்து தொடர்புகொள்ள முடியும்.
அமைச்சகம் மேலும் விளக்கியதாவது, நிபுணர்கள் தங்களை பணியமர்த்திய தரப்பினரை விட நீதிமன்றத்திற்கே அதிக பொறுப்புக் கொண்டவர்கள் என்ற அடிப்படை விதி இப்போது சட்டரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், சிக்கலான வழக்குகளில் தேவையானபோது, நீதிமன்றம் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் பல நிபுணர்களை ஒரே நேரத்தில் சாட்சியமளிக்க அனுமதிக்கலாம். இது தொழில்நுட்ப ஆதாரங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பிட உதவும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.