சூப்பர் மூன்..!! சிங்கப்பூர் வானில் தென்பட்ட அரிய காட்சி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் “பீவர் மூன்” நேற்று(05.11.25) மாலை வானில் தென்பட்டது. இந்த அரிய காட்சி தீவின் பல பகுதிகளில் இரவு வானத்தை ஒளிரச் செய்தது. இது பல புகைப்பட ஆர்வலர்களை ஈர்த்தது. இந்த அழகிய காட்சியை பலரும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவும் செய்தனர்.
உள்ளூர் வானியல் ஆர்வலர் குழுவான ஸ்டார்கேசிங் சிங்கப்பூர் தெரிவித்ததாவது, பொதுவாக “பீவர் மூன்” என அழைக்கப்படும் இந்த சூப்பர் மூன் இரவு 9 மணி 21 நிமிடங்களுக்கு முழுமையாக பிரகாசித்தது
வானிலை அனுமதித்தால், மக்கள் மாலை 6 மணி 50 நிமிடங்களில் வடகிழக்கு அடிவானத்தில் நிலவு உதயத்தை காணலாம் என்றும், இரவு 9 மணியளவில் வானத்தில் மிக உயரமாக அதை ரசிக்க முடியும் என்றும் குறிப்பிட்டனர்.
நவம்பர் மாதத்தில் ஏற்படும் இந்த முழு நிலவு, சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகள் உறைவதற்கு முன்பு நீர்நாய்கள் தங்களின் இருப்பிடத்தை அமைக்கும் பருவத்துடன் தொடர்புடையது.
இதனால் இதற்கு “பீவர் மூன்” எனப் பெயர் கிடைத்தது. இது “ஃப்ராஸ்ட் மூன்” அல்லது “டார்க் மூன்” எனவும் அழைக்கப்படுகிறது. இந்த “பீவர் மூன்” இவ்வாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூனாகக் கருதப்படுகிறது.