Tamil Sports News Online

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளது. போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி, பந்தய தூரத்தை 13.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் டெராட அசுகா மற்றும் அயோமி ஆகியோர் முறையே ஓட்டத்தினை 13.13 மற்றும் 13.26 வினாடிகளில் கடந்து வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

இதனை அடுத்து ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய போட்டிகளில் இவர் பதக்கம் வெல்வது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு தங்கப் பதக்கமும் மற்றும் 2019 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

மேலும் ஆண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அப்துல்லா அபூபக்கர் 16.93 மீட்டர் நீளத்தினை தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இவரை அடுத்து ஜப்பான் மற்றும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். அது மட்டும் அல்லாமல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்டரா வெண்கல பதக்கம் என்றார். இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மற்றும் 3 தங்கப்பதக்கங்களை வென்று வீரர்கள் இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளனர்.