சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்முறை பயிற்சி திட்டத்தைத் தொடங்க உள்ளது.
இது ICAO (சர்வதேச சிவில் விமான அமைப்பு) மற்றும் IMO (சர்வதேச கடல்சார் அமைப்பு) உடன் இணைந்து செயல்படும்.
புதிய பயிற்சிகளில் தலைமைத்துவம், மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், நெருக்கடி மேலாண்மை, விபத்து விசாரணை மற்றும் மனித மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சியாளர்கள் சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான அறிவையும், தலைமைத்துவத்தையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
மேலும், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து அகாடமி மற்றும் சிங்கப்பூர் கடல்சார் அகாடமியுடன் இணைந்து, சிறிய தீவு வளரும் நாடுகளுக்கான உடல் மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் நடத்தப்படும். நாடுகளின் தேவைகளுக்கேற்ப பாடநெறிகள் வடிவமைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பயிற்சி நடக்கிறது.தேர்வான பங்கேற்பாளர்களுக்கு விமானச் செலவுகள், தங்குமிடம், கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்கு பெல்லோஷிப் உதவித் தொகையும் வழங்கப்படும்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.