பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் சிங்கப்பூர் அரசு..!!!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து சிங்கப்பூர் தனது பாதுகாப்பு நிலைப்பாட்டை அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.
சோங் பாங்கில் நடந்த ஒரு சமூக நிகழ்வில் திரு. சண்முகம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், சிங்கப்பூர் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்றும், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் எதிர்தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் பிற நிறுவனங்கள் ரோந்து மற்றும் ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளன என்றும் கூறினார்.
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே சிங்கப்பூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தயாராகி வருவதாகவும், பாதுகாப்பு என்பது அனைத்து குடிமக்களின் பொதுவான பொறுப்பு என்றும் சண்முகம் கூறினார்.