சிங்கப்பூர் மக்களே! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!!
சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மறக்க முடியாத சோகமான நிகழ்வாக விளங்கும் டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட அனுபவக் கண்காட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படுகிறது.
“டைட்டானிக்: தி அனுபவம்” என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி Fever Exhibition Hall-இல் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி, பார்வையாளர்களை ஒரு டைட்டானிக் பயணியின் பார்வையிலிருந்து அந்த பயணத்தில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கப்பலில் ஏறும் தருணத்திலிருந்து, அதன் பயண அனுபவம் மற்றும் பனிப்பாறை மோதி மூழ்கும் அதிர்ச்சி தருவான தருணங்களையும் நேரில் அனுபவிக்க முடியும்.
அமெரிக்காவின் சின்சினாட்டி, நியூ ஆர்லியன்ஸ் மற்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற பிறகு, சிங்கப்பூர் இக்கண்காட்சியை நடத்தும் முதல் ஆசிய நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை உலகம் முழுவதிலும் 700,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இக்கண்காட்சி ஈர்த்திருக்கிறது.
1,300 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த கண்காட்சியில், 3D காட்சிகள், யதார்த்த அனிமேஷன்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டைட்டானிக் கப்பலின் உண்மை மற்றும் உணர்ச்சிப் படங்கள், பயணிகளின் கையால் எழுதப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்கள் காணப்படுகின்றன.
சிங்கப்பூர் பதிப்பின் சிறப்பு அம்சமாக, 1912ல் விபத்து நடந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் நகரத்தின் வாழ்க்கைமுறை, புகைப்படங்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணியை சுவரொட்டிகளின் வாயிலாக பார்வையாளர்கள் காண முடியும்.
அதேபோல், பார்வையாளர்கள் மெய்நிகர் யதார்த்தம் (VR) தொழில்நுட்பம் மூலம், 4 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு “டைவ்” செய்து, தற்போது கடலின் அடியில் இருக்கும் டைட்டானிக் இடிபாடுகளை உணர முடியும்.
மேலும் மற்ற டைட்டானிக் கண்காட்சிகளைவிட இதில் இடம் பெற்றிருக்கும் தனித்துவம் என்னவென்றால், இது பயணிகளின் உணர்ச்சி அனுபவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கேபின்கள், உணவகங்கள், தளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் செல்லும் போது பார்வையாளர்கள் அந்த காலத்துக்கே பின்சென்று உணரக்கூடியதாக இருக்கும்.
மேலும் இந்த கண்காட்சியின் டிக்கெட் விலை S$23.90 இல் இருந்து துவங்குகிறது. ஒவ்வொரு பார்வையாளரும் சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை கண்காட்சியை அனுபவிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் இலவசமாம்.
டிக்கெட் விற்பனை ஜூலை 10ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ Fever தளத்திலும், கண்காட்சி இணையதளத்திலும் தொடங்குகிறது.