ECG பரிசோதனையில் பிரச்சினை இல்லை.. அன்றிரவே MRT நிலையத்தில் உயிரிழந்த 34 வயது ஆடவர்!


சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்று நாட்களாக நெஞ்சுவலி மற்றும் இதயப் படபடப்பால் அவதிப்பட்டு வந்த 34 வயது ஆடவர், மருத்துவப் பரிசோதனையில் எந்தப் பெரிய பாதிப்பும் கண்டறியப்படாத நிலையில், அன்றிரவே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tan Shi Cong Jasper என்ற அந்த ஆடவர், கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக பெடோக் பலதுறை மருந்தகத்திற்குச் (Bedok Polyclinic) சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், உடல்நிலை சீராக இருப்பதும், இதய மின்துடிப்பு பரிசோதனையில் (ECG) எந்தவித அசாதாரண அறிகுறிகளும் இல்லை என்பதும் தெரியவந்தது.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி இல்லாததால், மருத்துவர்கள் மேலதிக இதயப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்திற்குப் பரிந்துரைத்தனர். அத்துடன், அன்றைய தினத்திற்கான மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டது.
ஆனால், அன்று இரவு சுமார் 10:35 மணியளவில் நண்பருடன் ராஃபிள்ஸ் பிளேஸ் MRT நிலையத்தில் மின்படிக்கட்டில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் திடீரென முன்னோக்கிச் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, அவருடன் இருந்த நண்பர் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்தார். பின்னர் அவருக்கு உடலில் துடிப்பு போன்ற அசைவுகள் ஏற்பட்டதுடன், சுயநினைவையும் இழந்தார்.
தகவலறிந்த நிலைய ஊழியர்கள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள், அவருக்கு நாடித்துடிப்பும் சுவாசமும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை (CPR) அளிக்கப்பட்டு, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மறுநாள் அதிகாலை 12:32 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஒன்றில் கடினத்தன்மை காரணமாக சுமார் 50% குறுகல் இருந்தது கண்டறியப்பட்டது.
இருப்பினும், இத்தகைய அளவிலான குறுகல் பொதுவாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல என்று தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாரடைப்பு அல்லது இதயத் தசை அழற்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை. இதயத்தின் அளவும் இயல்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதய நோய் தொடர்பான மரபணுப் பரிசோதனையிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.
இதனால், அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததற்கான குறிப்பிட்ட மருத்துவக் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
மகனின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றபோது, அவரது பெற்றோர் பெடோக் பலதுறை மருந்தகத்தின் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
மூன்று நாட்களாக நெஞ்சுவலி இருந்த நிலையில், ஏன் அவரை அன்றே மருத்துவமனைக்கு அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சிங்ஹெல்த் பலதுறை மருந்தகத்தின் அறிக்கையில், நெஞ்சுவலியுடன் வந்த நோயாளிகளுக்கான மருத்துவ நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
அவர் மருத்துவமனைக்கு வந்தபோது நெஞ்சுவலி இல்லை என்றும், உடல்நிலை சீராக இருந்ததுடன் ECG பரிசோதனையிலும் அசாதாரண அறிகுறிகள் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக தேசிய இதய நிலையத்திற்கு மேலதிகப் பரிசோதனைக்காகப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
காவல்துறை விசாரணை, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மருத்துவ ஆதாரங்களை ஆய்வு செய்த மரண விசாரணை அதிகாரி, சந்தேகத்திற்குரிய செயல்கள் அல்லது பிறரால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த 34 வயது ஆடவரின் மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், உயிரிழப்புக்கான குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்த Jasper, உள்ளூர் தொலைக்காட்சி நடிகையான Chantalle Ng-இன் தீவிர ரசிகராக இருந்தவர். அவரது மறைவுக்குப் பின்னர் நடிகையும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஒரு சாதாரண மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்றிரவே நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
