சிங்கப்பூரில் அதிரடி மாற்றம்..!! 28 மருந்தகங்களின் முன்பதிவு நேரத்தை இனி HealthHub செயலியில் அறியலாம்!!


சிங்கப்பூரில் பொதுமக்கள் மருத்துவச் சேவைகளை எளிதாகப் பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட ‘ஹெல்த்ஹப்’ (HealthHub) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களின்கீழ் செயல்படும் 28 பலதுறை மருந்தகங்களிலும் மருத்துவரைச் சந்திப்பதற்கான முன்பதிவு நேர இருப்பை அறியும் புதிய வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங் மேம்படுத்தப்பட்ட செயலியை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தப் புதிய செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘போக்குவரத்து விளக்கு’ (Traffic Light) முறை மூலம், பலதுறை மருந்தகங்களில் மருத்துவரைச் சந்திப்பதற்கான முன்பதிவு நேரங்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
கட்டணச் செலுத்தும் முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ‘PayNow’, ‘Apple Pay’, ‘Google Pay’ ஆகியவற்றின் மூலம் பல்வேறு கட்டணங்களை ஒரே பரிவர்த்தனையில் செலுத்த முடியும். மேலும், எதிர்காலப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் கட்டண விவரங்களையும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இதுதவிர, பயனர்கள் தங்களது ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம் தொடர்பான விவரங்கள் மற்றும் மின்னிலக்க மருத்துவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சுகாதாரத் தகவல்களையும் செயலி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
சிங்கப்பூரின் சுகாதாரச் சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக, என்எச்ஜி ஹெல்த் (NHG Health), தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), சிங்ஹெல் (SingHealth) ஆகியவற்றின் தனித்தனி செயலிகள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளன.
இதில் பச்சை நிறம் முன்பதிவு செய்வதற்கு போதுமான இடங்கள் இருப்பதையும், மஞ்சள் நிறம் முன்பதிவு இடங்கள் குறைவாக இருப்பதையும், சிவப்பு நிறம் அனைத்து முன்பதிவு இடங்களும் நிரம்பிவிட்டதையும் குறிக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.
மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மருந்துகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், மற்றொரு முக்கிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய மருந்துகளைத் தவிர, மற்ற மருந்துகளைப் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்குப் பதிலாக, பொதுமக்கள் சுகாதாரச் சேவைகள் தொடர்பான பல்வேறு தேவைகளுக்கும் ‘ஹெல்த்ஹப்’ செயலியைப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட ஹெல்த்ஹப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயலியைப் பயன்படுத்துவதில் மூத்த குடியிருப்பாளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, தொலைபேசி உதவிச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் எஸ்ஜி மின்னிலக்கச் சமூக நடுவங்கள் (SG Digital Community Hubs) ஆகிய இடங்களில் நேரடி வழிகாட்டுதலும் வழங்கப்பட உள்ளது.
செயலியின் வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு, பல்வேறு சுகாதாரச் சேவைகள் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படுவதாக அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
மேலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் ‘ஹெல்தி 365’ (Healthy 365) செயலியின் அம்சங்களையும் ஹெல்த்ஹப் செயலியில் இணைப்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட சுகாதாரச் சேவைகளை வழங்குவதுடன், அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துவதே இந்தப் புதிய முயற்சியின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
