சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறையில் பெரும் செல்வாக்குடன் இருந்த மைக்ரோசாஃப்ட் முன்னாள் நிர்வாக இயக்குநர் லீ ஹுய் லி, நீண்ட விடுமுறையில் இருந்தபோது காலமானார். அவரது மறைவு வியாழக்கிழமை (ஜூலை 24) அன்று ஏற்பட்டது என CNA செய்தி தெரிவித்தது.
மைக்ரோசாஃப்ட் மற்றும் சிங்கப்பூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக்க முக்கியமானது. “அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர். எண்ணற்ற தலைவர்களை உருவாக்கி, நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பலருக்கு ஊக்கமளித்தவர்” என்று மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
லீ ஹுய் லி, மார்ச் 2022 முதல் மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர் மற்றும் புருனேயின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். தொழில்துறையில் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் IBM, Symantec, Dell, HP, Ernst & Young போன்ற நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார்.
அவர் மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா–சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை நிறுவும் பணியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆய்வகம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் AI ஆராய்ச்சி மையமாகும்.
ஜூலை 2023 முதல், NUS ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங்கின் தொழில் ஆலோசனைக் குழு தலைவராகவும், நவம்பர் 2023 முதல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பசுமை திறன்கள் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டார்.
அவரது இறுதிச் சடங்கு, ஜூலை 28 ஆம் தேதி திங்கட்கிழமை, கிங்ஸ் சாலையில் உள்ள செயிண்ட் இக்னேஷியஸ் தேவாலயத்தில் நடைபெறும் என இரங்கல் செய்தி தெரிவித்தது.
சிங்கப்பூரின் தொழில்நுட்பத் துறையில் அவர் விட்டுச் சென்ற பாதை அழியாதது.