சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியதற்காக 32 முதல் 55 வயதுக்குட்பட்ட 14 ஆண் கனரக வாகன ஓட்டுநர்கள் நாளை (24.02.26)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.
காவல்துறை அறிக்கையின்படி, அவர்கள் இயக்கிய கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பான் தீவு விரைவுச்சாலை, சிலேத்தார் விரைவுச்சாலை, தனா மேரா கோஸ்டல் சாலை மற்றும் ஷியர்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் இவ்வழக்குகள் பதிவாகியுள்ளன.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றவாளிகளுக்கு S$1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் செய்தால், S$2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
12,000 கிலோவுக்கு மேற்பட்ட சுமை திறன் கொண்ட வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், கட்டாய தொழில்நுட்ப சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், 3,501 கிலோ முதல் 12,000 கிலோ வரை சுமை திறன் கொண்ட லாரிகளிலும் கட்டாயமாக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். 2018 ஜனவரி 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட சில லாரிகளுக்கான காலக்கெடுகள் இந்த ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.