வட்டப் பாதை ISC மேம்படுத்தல் நிறைவு...!! செப்டம்பர் முதல் சேவை நேரம் மாற்றம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் MRT ஆபரேட்டர் SMRT, வட்டப் பாதையின் ஒருங்கிணைந்த மேற்பார்வை கட்டுப்பாட்டு அமைப்பின் (ISC) ஆறு ஆண்டு மேம்படுத்தலை நிறைவு செய்துள்ளன. கடந்த மாதம் நிறுவல் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.இது விரைவில் திறக்கப்பட உள்ள ஆறாவது கட்டத்துடன் இணக்கமாக செயல்படும்.
முழு வட்டப் பாதையிலும் கணினி ஒருங்கிணைப்பு சோதனை நடத்தப்படும் நிலையில், செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 28 வரை ரயில் சேவை நேரம் மாற்றப்படுகிறது.இந்த காலத்தில்:
✨️ வெள்ளி, சனி இரவுகளில் சேவை 11 மணிக்கு முன் முடியும்
✨️ சனி, ஞாயிறு காலை 9 மணிக்குத் தான் துவங்கும்
✨️ சில வார இறுதிகளில் (அக்டோபர் 3–5, நவம்பர் 28–30, டிசம்பர் 5–7) சேவை வழக்கம் போல் இயங்கும்.
சேவை தாமதமாக துவங்கும் நாட்களில், காலை 5–9 மணிக்குள் MRT கட்டணத்துடன் இணையான ஷட்டில் பேருந்து சேவைகள் வழங்கப்படும்.
இந்த மாற்றங்களால் பயண நேரம் அதிகபட்சம் 30 நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கூடுதல் தகவல்களை MyTransport.SG பயன்பாடு மற்றும் LTA/SMRT சமூக ஊடகங்களில் அறியலாம்.
வட்டப் பாதையின் ஆறாவது கட்டத்தில் உள்ள மூன்று புதிய MRT நிலையங்கள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திறக்கப்பட உள்ளன.
இதன் மூலம் ஹார்பர்ஃபிரண்ட் மற்றும் மெரினா பே நிலையங்கள் இணைக்கப்பட்டு, வட்டப் பாதை முழுமையான வளையமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.