சிங்கப்பூரில் திடீர் சம்பவம்! வேரோடு சாய்ந்த பிரம்மாண்ட மரம்…என்ன நடந்தது?

சிங்கப்பூரில் திடீர் சம்பவம்! வேரோடு சாய்ந்த பிரம்மாண்ட மரம்...என்ன நடந்தது?

சிங்கப்பூரின் க்ளெமெண்டி பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில், பல மீட்டர் உயரமுள்ள பெரிய மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நவம்பர் 23ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில், க்ளெமெண்டி அவென்யூ 3-ல் உள்ள புளோக் 442 மற்றும் 443 ஆகிய வீடுகளுக்கு இடையிலான வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.

சம்பவத்தின்போது அருகிலுள்ள கடையில் பணியாற்றிய ஒருவர் திடீரெனப் பெரிய சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்தபோது மரம் வேருடன் சாய்ந்து கிடந்ததாகவும் தெரிவித்தார்.

 


விழுந்த மரத்தின் தண்டில் சில மின்சாரக் கம்பிகள் சிக்கியிருந்தன. இதனால், அப்பகுதியில் நடைபெறவிருந்த இரவு சந்தைக்காக மின்சாரக் கம்பிகள் இழுக்கப்பட்டபோது ஏற்பட்ட இழுவிசை காரணமாக மரம் விழுந்திருக்கலாம் எனச் சிலர் சந்தேகம் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் இரவு சந்தைக்கான கூடாரங்கள் அமைத்தல் மற்றும் மின்சார இணைப்புப் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் ஒருவரான ரஹ்மான் ஷாபிகுர், மின்சாரக் கம்பிகளை இணைக்கும் பணி முடிவடைவதற்கு முன்பே மரம் விழுந்ததாகக் கூறினார்.

மரத்தின் வேர்கள் ஆழமாக இல்லாததுடன், அதைச் சுற்றியிருந்த மண்ணும் தளர்வாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சம்பவ இடத்தைக் கடந்து சென்ற 43 வயதான ஆசிரியர் ஒருவர், மரம் விழுந்தபோது பலத்த காற்றோ மழையோ பெய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூரோங்–க்ளெமெண்டி–புக்கிட் தீமா நகர மன்றம் விளக்கமளித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின்படி, சம்பவத்தன்று பிற்பகுதியிலிருந்து இரவு வரை தொடர்ந்து பெய்த மழையால் மண் ஈரமாகி தளர்ந்ததே மரம் விழுந்ததற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரக் கம்பிகளுக்கும் மரம் விழுந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் நகர மன்றம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நகர மன்றம் ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பி மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தது. அன்று இரவு சுமார் 11 மணியளவில் மரம் முழுமையாக அகற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனங்களுக்கும் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், சம்பவம் நடந்த இடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மரங்களின் பாதுகாப்பு நிலை குறித்து கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நகர மன்றம் தெரிவித்துள்ளது.