சுவையான பலாப்பழ போளி சாப்பிட்டு இருக்கீங்களா..!! எப்படி செய்றதுன்னு இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!
பலாப்பழத்தின் இயற்கை இனிப்பு, வெல்லத்தின் மணம், தேங்காயின் ருசி என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நாவில் கரையும் சுவையை தரும் பலாப்பழ போளி!
வீட்டிலேயே எளிமையாக செய்து, குடும்பத்தினருடன் சூடாக பரிமாறி மகிழுங்கள். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாரம்பரிய இனிப்பு இது! அதை எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்: மைதா – ¼ கிலோ மஞ்சள்பொடி – ¼ டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை பலாப்பழ விழுது – 1 கப் பொடித்த வெல்லம் – ¼ கப் ஏலக்காய்த் தூள் – ¼ டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு தேங்காய்த் துருவல் – ¼ கப் நெய் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு வாழை இலை – 1
செய்முறை: மைதாவில் மஞ்சள்பொடி, உப்பு, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தண்ணீர் விட்டு சற்று தளர்த்தியாக பிசையவும். அதன் மேல் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பலாச்சுளைகளை விதை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, அதில் பலாப்பழ விழுதைப் போட்டு, வெல்லம் போட்டுக் கிளறவும்.
தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். வாழை இலையில் நல்லெண்ணெய் தடவி, அதில் பிசைந்த மைதாவை எலுமிச்சை அளவு போட்டு தட்டவும். பின்னர் அதில் அதே அளவு பூரணம் வைத்து அனைத்து பக்கமும் மூடி மெல்லிதாக தட்டவும்.
வாணலியில் தவாவை வைத்து, அதில் நெய் விட்டு, தட்டிய போளியைப் போட்டு, இருபுறமும் நெய்விட்டு, வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இதை அனைவரும் விரும்பி ருசிப்பார்கள்.