ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?

சிங்கப்பூரில் டோவா பேயோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அந்த கார் ஓட்டுநரின் கைபேசியில் சட்ட விரோதமான பல சூதாட்ட இணையதளங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று, இரவு சுமார் 8:40 மணியளவில் ‘ஒலியாண்டர் டவர்ஸ்'( ) குடியிருப்புக்கு வெளியே உள்ள டோவா பேயோ லோரோங் 1 முக்கிய சாலையில் இந்த சோதனை நடந்துள்ளது.

ரோந்து காவல்துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தபோது, சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் நூற்றுக்கணக்கான மின்னணு சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதை அடுத்து காவல்துறையின் மோப்ப நாய்களின் உதவியுடன் அந்த நபரின்  காரிலும், பின்னர் வீட்டிலும் கூடுதல் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அந்த நபரின் கார் மற்றும் வீட்டிலிருந்து மொத்த 190க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகளையும்,  450க்கும் மேற்பட்ட அதன் உதிரி பாகங்களையும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) பறிமுதல் செய்துள்ளது.

இச்சம்பவத்தில் சிக்கிய 37 வயது ஓட்டுநரிடம் 2 முக்கிய பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது கைபேசியில் உரிமமற்ற சூதாட்ட தளங்கள் சேமிக்கப்பட்டிருந்ததால் சூதாட்ட கட்டுப்பாட்டு சட்டம் 2022 -ன் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார். அந்த குற்றத்திற்கு $10,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூரில் வேப் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை புரிபவர்களுக்கு $10,000  வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதனை விற்பனை செய்யவோ அல்லது கடத்த முயன்றாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக 6 ஆண்டுகள் சிறை மற்றும் $200,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.