ஒரே ஒரு Email தவறு..சிங்கப்பூரில் நோயாளிகளின் தகவல்கள் வெளியானதாக பரபரப்பு..!!

ஒரே ஒரு Email தவறு..சிங்கப்பூரில் நோயாளிகளின் தகவல்கள் வெளியானதாக பரபரப்பு..!!

சிங்கப்பூரின் National Cancer Centre Singapore (NCCS) அனுப்பிய மின்னஞ்சலில் ஏற்பட்ட நிர்வாகத் தவறு காரணமாக, மரபியல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு தொடர்புடைய சில நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்ற மின்னஞ்சல் பெறுநர்களுக்குத் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி, Hereditary Breast and Ovarian Cancer Syndrome (HBOC) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அழைப்பை NCCS, அந்த நிலை தொடர்புடைய நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரே மின்னஞ்சலை பலருக்கு அனுப்பும்போது, பெறுநர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க BCC (Blind Carbon Copy)பயன்படுத்தப்படும்.

ஆனால் இந்த மின்னஞ்சலில் BCC-க்கு பதிலாக CC பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் மின்னஞ்சலைப் பெற்றவர்கள் மற்றவர்களின் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பார்க்க முடிந்துள்ளது.

சிலர் தங்களது பணியிட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியிருந்ததால், அவர்களின் பணியிடங்களும் அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது.

வெளிப்படையாகத் தெரிந்த மின்னஞ்சல் முகவரிகளின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவற்றில் நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிகளும் இருந்துள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட நபர்கள் மரபியல் புற்றுநோய் பரிசோதனை அல்லது ஆலோசனையுடன் தொடர்புடையவர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இந்த தவறு குறித்து பின்னர் NCCS மற்றொரு மின்னஞ்சலை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், முந்தைய மின்னஞ்சலை Inbox மற்றும் Trash folders-லிருந்தும் நீக்குமாறும், அதில் இடம்பெற்றிருந்த மின்னஞ்சல் முகவரிகளை மற்றவர்களிடம் பகிரவோ அல்லது சேமிக்கவோ வேண்டாம் என்றும் பெறுநர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், இது நிர்வாகத் தவறு என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உள்நிலை செயல்முறைகள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவதாகவும் NCCS தெரிவித்துள்ளது.

HBOC (Hereditary Breast and Ovarian Cancer Syndrome) என்பது மரபியல் காரணிகளுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும். இது BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணுக்களில் ஏற்படும் சில தீங்கு விளைவிக்கும் மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

இத்தகைய மரபணு மாற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் வாழ்நாள் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையில், மின்னஞ்சல் அனுப்பும் போது பெறுநர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பான நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.