சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. 8 ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்!

சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. 8 ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சீன நாட்டவர்!

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெறுவதற்காக சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பலமுறை லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் 32 வயது சீன நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாங் யான்சியோங் (Zhang Yanxiong) என்ற அந்த நபர், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் (Terminal 1) இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அன்றைய தினம் விமான நிலையத்தில் பணியாற்றிய எட்டு ஊழியர்களிடம் அவர் ஆறு முறை லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் குறைந்தது S$800 தொகை சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்ட எட்டு ஊழியர்களில் ஆறு பேர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் ஆவர். மேலும், சேட்ஜ் ஏவியேஷன் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும், மனிதவள நிறுவனத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஒருவரும் இதில் அடங்குவர்.

இருப்பினும், லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எட்டு ஊழியர்களும் அதனை ஏற்க மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு (CPIB) விசாரணை மேற்கொண்டது.

சிங்கப்பூரில் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும், ஊழல் தொடர்பான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் 6ஆவது பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது S$100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தச் சம்பவம் சிங்கப்பூரின் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.