அதிகாரியையே கடித்த போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்!! சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்!!

அதிகாரியையே கடித்த போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்!! சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரின் மார்சிலிங் ரோடு பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 64 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி காலை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் அந்த வீட்டில் அதிரடிச் சோதனையைத் தொடங்கினர்.

அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த நபர் அதிகாரிகளுடன் கடுமையாகப் போராடி வன்மையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

கைது நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில், அவர் ஒரு அதிகாரியின் தொடையில் ஜீன்ஸ் பேண்டையும் தாண்டிப் பலமாகக் கடித்துக் காயப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, அங்கிருந்த மற்ற இரண்டு அதிகாரிகள் மீதும் அவர் எச்சில் துப்பியுள்ளார். இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மூன்று அதிகாரிகளுக்கும் தொற்றுநோய் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் உட்பட உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அந்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் $55,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டவற்றில் 1,554 கிராம் கஞ்சா, 166 கிராம் ‘ஐஸ்’ (Ice) மற்றும் 25 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

இவற்றுடன் சேர்த்து $356 ரொக்கப் பணமும், போதைப்பொருள் பயன்படுத்தத் தேவையான உபகரணங்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்கள் சுமார் 320 போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களின் ஒரு வாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அதிகமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த நபரிடம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக விசாரணைக்காக அவர் சிங்கப்பூர் காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடமையாற்றும் அதிகாரிகளை அச்சுறுத்துபவர்கள் அல்லது தாக்குபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என CNB புலனாய்வுப் பிரிவு இயக்குநர் உதவி ஆணையர் இங் காய் சாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூர் சட்டப்படி, 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருப்பதோ அல்லது கடத்துவதோ மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றமாகும்.