குறைந்த விலையில் சுற்றுலா செல்ல ஆசையா..? CTC Travel பெயரில் புதிய மோசடி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரில் பிரபல பயண நிறுவனமான CTC Travel நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, மூத்த குடிமக்களைக் குறிவைத்து மோசடி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
CTC Travel நிறுவனத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்து, குறைந்த விலையில் சுற்றுலாப் பயணத் திட்டங்கள் வழங்கப்படுவதாகக் கூறி மோசடி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக 20 சிறப்புச் சுற்றுலாப் பயணத் திட்டங்கள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் போலியான விளம்பரம் பரப்பப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில், அனைத்துச் செலவுகளும் அடங்கிய சுற்றுலா தொகுப்புகள் குறைந்த விலையில் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் ‘Local Online Service – 1’ என்ற பயனர் பெயரில் பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து CTC Travel நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் மோசடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் போலியான விளம்பரங்களை வெளியிடுவதாகவும், பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிறுவனத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ சலுகைகள் மற்றும் விளம்பரங்கள் அதன் அதிகாரப்பூர்வ Facebook கணக்கு மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறக்கவோ, தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணம் செலுத்துவது தொடர்பான தகவல்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் காணப்படும் சுற்றுலா சலுகைகள் உண்மையானவையா என்பதில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட பயண நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சுற்றுலா செல்லலாம் என்ற ஆசையில் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என CTC Travel நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
