உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு சிறப்பு மோதிரம் பரிசு: இறுதிப்போட்டி நடுவர் அறிவிப்பு!

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு சிறப்பு மோதிரம் பரிசு: இறுதிப்போட்டி நடுவர் அறிவிப்பு!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி குறித்த விறுவிறுப்பான தகவல்களும், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பிரம்மாண்டமான பரிசுகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் மோதல்
​உலகமே உற்றுநோக்கும் 23-வது உலகக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ‘மெட் லைஃப்’ ஸ்டேடியத்தில் நடக்கிறது. மகுடத்துக்கான இந்த இறுதி யுத்தத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் களம் காண்கின்றன.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இந்த ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதால், மைதானமும் ரசிகர்களின் மனங்களும் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன. மற்றொரு பக்கம், இப்போட்டி தொடர்பான சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை.
​வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தங்க மோதிரப் பரிசு’
​உலகக் கோப்பையை வென்று உச்சி முகரப் போகும் அணிக்கு உலகக் கோப்பை, தங்கப்பதக்கம் மற்றும் ₹482 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படவுள்ளது. அத்துடன் சேர்த்து, 96 ஆண்டு கால உலகக் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக இத்தடவை பட்டத்தை வெல்லும் அணி வீரர்களுக்கு விசேஷ ‘தங்க மோதிரப் பரிசு’ வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சர்வதேச கால்பந்து சங்கம் (FIFA) வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
​வட அமெரிக்க நாடுகளின் விளையாட்டுத்துறையில் பிரபலமாக உள்ள மரபுகளில் ஒன்றான ‘சாம்பியன்ஷிப் மோதிர’ முறையை, உலகளாவிய கால்பந்து விளையாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
​மோதிரத்தின் சிறப்பம்சங்கள்:
​இந்த மோதிரத்தின் ஒரு பக்கம் உலகக் கோப்பையின் வடிவமும், மறுபக்கம் வெற்றி பெறும் அணியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி முடிந்தவுடன், வெற்றி பெறும் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு தற்காலிக மோதிரங்கள் உடனடியாக வழங்கப்படும்.
​பின்னர் வீரர்களின் சரியான அளவுக்கு ஏற்ப மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் நம்பகத்தன்மைக்கான சான்றிதழுடன் பிந்தைய ஒரு தேதியில் வழங்கப்படும்.
​இந்த உலகக் கோப்பையைக் குறிக்கும் வகையில் மொத்தம் 2,026 சிறப்பு மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 30 மோதிரங்கள் வெற்றி பெறும் அணியினருக்கு அளிக்கப்படும். மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி நடுவர் ஆனந்தக் கண்ணீர்!
​இறுதிப்போட்டியில் நடுவராகப் பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவி நடுவர்களாக தாமஸ் கிளான்ஸ்னிக், ஆண்ட்ராஸ் கோவாசிச் ஆகியோர் செயல்படுவார்கள். 4-வது நடுவராக ஆதாம் மகத்மேவும், மாற்று உதவி நடுவராக முகமது அல்காலாபும் இருப்பார்கள்.
​’பிபா’ நடுவர் குழுவின் தலைவர் பியர்லூகி கோலினோ இதனை அறிவித்த போது, நடுவர் சிலாவ்கோ வின்சிச் இன்ப அதிர்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார். “இது நம்ப முடியாத ஒரு கௌரவம், என்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று சிலாவ்கோ நெகிழ்ச்சியுடன் கூறினார்.

46 வயதான சிலாவ்கோ ஏற்கனவே கடந்த உலகக் கோப்பையில் 2 ஆட்டங்களுக்கும், இந்த உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களுக்கும் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியிலும் நடுவர் பணியை கவனித்துள்ளார். களத்தில் எதிரணியினரை கையால் வாயை மூடிக்கொண்டு திட்டும் வீரருக்கு ‘சிவப்பு அட்டை’ வழங்கும் புதிய விதிப்படி, இந்த நடுவர்தான் முதன்முறையாக சிவப்பு அட்டையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவிடம் தோற்ற போது, அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கியதும் இதே நடுவர்தான்.
​நேரில் பார்க்கும் டொனால்டு டிரம்ப்!
​உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரில் பார்க்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், பிபா தலைவர் இன்ஃபான்டினோவும் இணைந்து பரிசுக்கோப்பையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
​இதேபோல் தங்கள் அணியின் ஆட்டத்தைக் காண ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அர்ஜென்டினா அதிபரின் ‘மூடநம்பிக்கை’ தவிர்ப்பு!
​ஆனால், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலி இறுதி ஆட்டத்தை நேரில் சென்று பார்க்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். ‘மூடநம்பிக்கை’ காரணமாக, அவர் வீட்டிலிருந்தபடியே போட்டியைப் பார்க்க உள்ளதாகக் கூறியுள்ளார். 1990-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோற்றதில் இருந்து, அந்த அணி விளையாடும் இறுதி ஆட்டங்களை நேரில் சென்று பார்ப்பதை அர்ஜென்டினா அதிபர்கள் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK