விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!
தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது!
கால் நூற்றாண்டுக்கு முன்பு… வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய்.
24 மணி நேரமும் ஓய்வு இல்லாத வாகனச் சத்தம் நிறைந்த இப்பகுதியில், இரவில் கணவாய் பாதை பயம் தருவதாக இருந்தது. கணவாய் பகுதியில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும்போது, அப்பகுதியைச் கடப்பது மிகக் கடினமாக இருந்தது. இதனால் ஆபத்தான பயணமாகவே தொடர்ந்தது. ஆபத்தான வளைவுகளில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்வது, முன்னால் செல்லும் வாகனங்களின் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது.
நீளமான தேசிய நெடுஞ்சாலை: அன்றைய ஒரு வழிச் சாலையாக இருந்த இச்சாலையில், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே பயணித்தன. கனரக வாகனங்கள் குறைவாகவே இருந்தன.
1906: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தர்மபுரி முதல் தொப்பூர் வரை இரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
1909 ஜனவரி 15: தொப்பூர் கணவாய் வழியாக இரயில் போக்குவரத்து அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, தர்மபுரி – ஓசூர் வழித்தடத்தில் 29 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டது.
1923 – 1928: பஞ்ச காலத்தில் உணவுக்காக சாலைப் பணிகள் நடைபெற்றன.
1990-கள்: லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
2009: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
இப்பாதை தர்மபுரியில் இருந்து 20 கி.மீ தூரத்திலும், சேலத்தில் இருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது இந்தியாவின் மிகநீளமான தேசிய நெடுஞ்சாலையான NH 44-ன் முக்கியமான ஒரு பகுதியாகும்.
பஞ்சத்தில் உருவான கணவாய் சாலை: தொப்பூர் கணவாய் மலைப்பாதை சாலை உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு. 1823-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரை ஏற்பட்ட பஞ்சத்தின் போதுதான் இது பஞ்ச நிவாரணச் சாலையாக அமைக்கப்பட்டது.
பஞ்சத்தின் போது மக்களுக்கு உணவு வழங்க, ஆங்கிலேய அரசு “வேலைக்கு உணவு” திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, மக்கள் மலையை உடைத்துச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1883-ம் ஆண்டு ‘சேலம் டிஸ்ட்ரிக்ட் கெஜட்டர்’ புத்தகத்தில் தொப்பூர் கணவாய் பற்றிய குறிப்புகள் உள்ளன. தொப்பூர் மலைப்பாதையின் 150 ஆண்டுகால வரலாற்றை இவை நினைவூட்டுகின்றன.
ஆபத்தான சாலை & உயர்மட்ட பாலம்: தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள 9 கிலோமீட்டர் நீளமுள்ள பாதை, மிகவும் செங்குத்தான சரிவு மற்றும் ஆபத்தான வளைவுகளைக் கொண்டது. நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன. இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை கனரக வாகனங்கள்.
2018 – 2023 வரை: இக்காலக்கட்டத்தில் மட்டும் இப்பகுதியில் 630 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தீர்வாக புதிய உயர்மட்ட மேம்பாலம்: இவ்விபத்துகளைத் தவிர்க்க ரூ.905 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
83 பிரமாண்ட தூண்கள்: இந்த பாலம் அமைப்பதன் மூலம் 9 சதவீதமாக இருக்கும் ஆபத்தான சரிவு, 5 சதவீதமாகக் குறைக்கப்படும். 6.5 கி.மீ நீளம்: 6.5 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.
6 வழிச்சாலை: 6 மிடர் முதல் 50 மீட்டர் வரை (சுமார் 15 மாடி கட்டிடம்) உயரத்தில், 6 வழிச்சாலையாக இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 41.53 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
‘தொப்பூர்’ பெயர் வந்தது எப்படி? கிழக்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடாகவும், ஏராளமான மரங்கள் நிறைந்த தோப்பாகவும் இருந்ததால் ‘தோப்புரவு’ என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி ‘தொப்பூர்’ ஆனதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, நிலவியல் ரீதியாக செங்குத்தான மலைகளுக்கு இடையே சூழ்ந்த வடிவில் அமைந்துள்ள நிலப்பரப்பு அல்லது பள்ளத்தைக் குறிக்கும் ‘தொப்பம்’ அல்லது ‘தொப்பொன்’ என்ற தூய தமிழ் சொல்லின் மறுவடிவமே ‘தொப்பூர்’ என்றும் கூறப்படுகிறது.