'3' என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து ‘3’ என்ற எண்ணில் தொடங்கும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொடர் ஏமாற்று வேலைகளில் சிக்கி, பொதுமக்கள் சுமார் $2.74 லட்சம் இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது போன்ற குறைந்தது 12 ஏமாற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ‘3’ என்ற இலக்கத்தில் தொடங்கும் அறியப்படாத 8 இலக்க எண்களில் (Business VOIP) இருந்து அழைப்புகள் வருகின்றன.
தங்களை வங்கி, நிதி நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனப் பிரதிநிதிகள் என்று அறிமுகப்படுத்தும் மோசடி நபர்கள், உங்களது கிரெடிட் கார்டில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது அல்லது உங்கள் பெயரில் புதிய போன் இணைப்பு பெறப்பட்டுள்ளது என்று கூறி பயமுறுத்துகின்றனர்.
பின்னர், இந்த அழைப்பு சட்ட அமைச்சகம் (MinLaw), சிங்கப்பூர் நாணய ஆணையம்(MAS) அல்லது காவல்துறை போன்ற அரசு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போல் நடிக்கும் மற்றொரு நபருக்கு மாற்றப்படுகிறது.
அந்தப் போலி அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் பண மோசடி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி, தப்பிக்க வேண்டுமானால் தங்களின் பணத்தை ஒரு பாதுகாப்பான கணக்கிருக்கு மாற்றுமாறு அல்லது தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களைப் புலனாய்வுக்காக அதிகாரிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த நபர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத போதும், சம்பந்தப்பட்ட உண்மையான அரசு நிறுவனங்களை அணுகி விசாரித்த போதுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.
பொதுமக்கள் விழிப்புணர்விற்காக காவல்துறையின் அறிவுரைகள் பின்வருமாறு: 👉முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஒருபோதும் நம்ப வேண்டாம்
👉எந்த ஒரு சிங்கப்பூர் அரசு அதிகாரியும் தொலைபேசி வாயிலாகப் பணம், வங்கி விவரங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்களைக் கேட்க மாட்டார்கள்.
👉சந்தேகம் எதுவும் தங்களக்கு இருந்தால், உடனடியாக சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மோசடி தடுப்பு உதவி எண்ணான 1799 என்ற எண்ணை அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.