ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்... யார் இந்த கெய்ன் யமால்?
இன்று உலகளாவிய சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஸ்பெயின் கால்பந்து அணியின் வெற்றிதான் முதன்மைப் பேச்சுப்பொருளாக இருக்கிறது. ஆனால், மைதானத்திலும் சரி, ரசிகர்களின் இதயத்திலும் சரி, வெற்றி நாயகன் லமீன் யமாலை (Lamine Yamal) விட அதிக கவனத்தை ஈர்த்த மற்றொரு நட்சத்திரமும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, யமாலின் 3 வயது குட்டித் தம்பி கெய்ன் யமால் (Keyne Yamal)!
தனது குழந்தைத்தனமான குறும்பு, துள்ளலான உற்சாகம் மற்றும் எதிர்பாராத சேட்டைகளால் இந்தத் தொடரின் மிகவும் விரும்பப்பட்ட வைரல் குட்டி நட்சத்திரமாக கெய்ன் மாறியுள்ளார்.
கேமராக்களைக் கவர்ந்த குறும்புச் சுட்டி: ஸ்பெயின் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் டிவி கேமராக்கள் லமீனைத் தேடுகிறதோ இல்லையோ, கெய்னைத் தேட ஆரம்பித்துவிட்டன. மைதானத்தில் இருந்த சில முன்னணி வீரர்களை விட கெய்ன் உலக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாகவே மாறிவிட்டார்.
ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டி: ஸ்பெயின் வெற்றியை நோக்கிச் சென்றபோது, “வாமோஸ்” (Vamos) என்று கத்திக்கொண்டே கெய்ன் ஆரவாரம் செய்த வீடியோதான் இந்த வைரல் பயணத்தின் தொடக்கம்.
கால் இறுதிப் போட்டி: மைதானத்தின் பெரிய திரையில் (Big Screen) தன் முகம் தெரிந்ததும், கேமராவைப் பார்த்து கை அசைத்து, நாக்கை நீட்டிச் சேட்டை செய்தார் கெய்ன். இதைப் பார்த்து அண்ணன் லமீன் யமாலும் அவரது சக வீரர்களும் சிரித்து மகிழ்ந்த தருணம் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இறுதிப் போட்டி கொண்டாட்டம்: ‘எண் 19’ ஜெர்சி, ‘பாவ் ரோல்’ (Paw Patrol) தொப்பி அணிந்து மைதானம் முழுவதும் சுற்றித் திரிந்த கெய்ன், அங்கிருந்த காவல் அதிகாரியின் தொப்பியைப் பிடுங்கி அணிந்தும், சக வீரர்களின் குழந்தைகளுடன் பந்தை உதைத்து விளையாடியும் உலக ரசிகர்களின் கவனத்தை அப்படியே தன் பக்கம் திருப்பினான்.
புதிதல்ல இந்தச் சேட்டை! கெய்னின் இந்த வைரல் கொண்டாட்டங்கள் புதிதல்ல. யூரோ 2024 சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றபோதும், போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் ஓடிவந்து தன் அண்ணனுடன் கொண்டாடினார். பார்சிலோனா (Barcelona) போட்டிகளின் போதும், ஆட்டம் முடிந்த பிறகு யமாலுடன் சேர்ந்து மைதானத்தில் பந்தை உதைத்து விளையாடுவது கெய்னின் வழக்கம்.
“என் தம்பிதான் என் உலகம்”: நெகிழும் லமீன் யமால் இந்த வைரல் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மிகவும் உருக்கமான, அழகான ஒரு குடும்பப் பிணைப்பு இருக்கிறது. தன் தம்பி மீது தான் வைத்துள்ள அளப்பரிய அன்பைப் பற்றி லமீன் யமால் ஒரு பேட்டியில் கூறியதாவது, “சமையலறையும் படுக்கையறையும் ஒன்றாக இருந்த ஒரு சிறிய வீட்டில்தான் நான் வளர்ந்தேன். ஆனால், அன்று எனக்குக் கிடைக்காத குழந்தை பருவம் இன்று என் தம்பிக்குக் கிடைக்கிறது. என் அம்மாவும் என் தம்பியும் சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பதுதான் எனக்கு உலகத்திலேயே மிகச் சிறந்த மகிழ்ச்சி. என் தம்பி எனக்கு எல்லாமே… அவன் என் மகனைப் போன்றவன்.”
இந்தத் தொடரில் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளப் போவது ஸ்பெயினின் சாம்பியன் பட்டத்தை மட்டுமல்ல; தனது இன்னொசென்ட்டான புன்னகையாலும், குறும்புத் தனத்தாலும், அண்ணன் மீதான தூய்மையான அன்பாலும் உலக மக்களின் மனதை வென்ற குட்டி ரசிகன் கெய்ன் யமாலைத்தான்!