ஐந்து நாள் பயணமாக பிரேசிலுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூ..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாளை (17.11.25) முதல் வெள்ளிக்கிழமை (21.11.25) வரை பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெறும் 30வது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு (COP30) மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
நிலைத்தன்மை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரேஸ் ஃபூ சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் முடிவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பார் என்றும், முழு அமர்வில் சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் பெவிலியனில் நடைபெறும் நிகழ்வுகளிலும், இளைஞர் காலநிலை நடவடிக்கை பயிற்சித் திட்டத்தின் இளைஞர் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
உலகளாவிய காலநிலை நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பல்வேறு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் கிரேஸ் ஃபூ பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார்.