சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!!
சிங்கப்பூர்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் அடுத்த ஆண்டு புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் கட்டப்பட இருக்கிறது. செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து அமைக்கப்படும் இந்த மையம், கல்வி நிலைய வளாகத்தில் உருவாகும் முதலாவது பராமரிப்பு நிலையமாகும்.
மாணவர்களுக்கு பயிற்சி வேலை அனுபவத் திட்டம், கற்றல் பயணம் ஆகியவற்றின் வாயிலாக சமூகப் பராமரிப்பு தொடர்பான அனுபவங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். தொழில்நுட்பம் சார்ந்த அறிவாற்றல் விளையாட்டுகள், மெய்நிகர் அனுபவங்கள் போன்றவை திட்டங்களில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
51 வயதான செயிண்ட் லியூக் பராமரிப்பு நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கென்னி டான், 15 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மருத்துவராக இருந்த பணியை விட்டு மூத்தோர் பராமரிப்புத் துறைக்குச் சென்றார். 2016ஆம் ஆண்டில் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு பல புதிய பங்காளித்துவங்களை ஏற்படுத்தியுள்ளார்.
மூத்தோர் பராமரிப்பில் ஒட்டுமொத்த சமூகமும் ஈடுபட வேண்டும் என்றும், பங்காளித்துவத்தின் மூலம் தடையற்ற சேவைகள் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். தற்போது செயிண்ட் லியூக் நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நிலையங்களை, இரண்டு தாதிமை இல்லங்களையும் நடத்தி வருகிறது. 1999இல் 220 மூத்தோருக்கு சேவை செய்த நிறுவனம், இப்போது 22,000 பேருக்கு பயனளிக்கிறது. 2030க்குள் இந்த எண்ணிக்கை 45,000 ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் டானின் சமூகப் பராமரிப்பு மேம்பாட்டுப் பங்களிப்பை அடையாளம் கண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி அவருக்கு பிளாட்டினம் தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதைப் பெறும் முதலாம்நபராக அவர் திகழ்கிறார்.
தெமாசெக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் புதிய மையத்தில், நாள்தோறும் 80க்கும் மேற்பட்ட மூத்தோருக்கு பகல்நேர பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளன.