இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..??

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தியத் திரைப்பட விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இவ்வாண்டும் இரண்டாவது முறையாக அதே விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 23 முதல் மார்ச் 8 வரை நகர மையத்தில் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் உருவான 21 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் மூன்று திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதால், திரைப்பட ஆர்வலர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.

1970ஆம் ஆண்டிலிருந்து அண்மைக் காலம் வரை வெளியான பல விருது பெற்ற படங்கள் இவ்விழாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ‘ரோஜா’, ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களும் அடங்கும். இந்தியத் திரையுலகின் கலாசாரப் பன்முகத்தன்மையையும், மொழிகளைக் கடந்த மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் படைப்புகளை முன்னிறுத்துவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

பிப்ரவரி 22ஆம் தேதி திரையிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படம், பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விமான சேவை நிறுவனம் தொடங்கும் கனவை அடையும் கதைப் பின்னணியைக் கொண்டது. இலக்கை நோக்கி துணிச்சலுடன் போராடுவோருக்கு இப்படம் பெரும் ஊக்கமளிப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

“திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைக்கும் வலிமை உடையவை. இவ்விழா இளைய தலைமுறையைத் தங்கள் பண்பாட்டு அடையாளத்துடன் இணைக்கிறது,” என்று அபயா சிவகுமார் கூறினார். “வாழ்க்கையின் எந்த நிலையிலும் இப்படங்களின் கருத்துகளுடன் நம்மை இணைத்துக் கொள்ள முடியும்,” என ஆத்மிக்கா லட்சுமி தெரிவித்தார்.

இவ்விழா மூலம் இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூர் மக்களிடையே மேலும் பரவலாக அறியப்படுகின்றன. அதே நேரத்தில்,
இந்தியா – சிங்கப்பூர் கலாசார உறவை வலுப்படுத்தும் முக்கிய மேடையாகவும் இந்தத் திரைப்பட விழா அமைகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK