ஐபிஎல்-2026 சாம்பியன் யார்? இன்று இறுதிப்போரில் பெங்களூரு – குஜராத் மோதல்!

ஐபிஎல்-2026 சாம்பியன் யார்? இன்று இறுதிப்போரில் பெங்களூரு - குஜராத் மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று(மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு-குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ந் தேதி தொடங்கியது.

10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வலுவான பெங்களூரு:
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை பந்தாடி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நடப்பு தொடரில் 9 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கும் அந்த அணி முதலாவது தகுதி சுற்றில் 254 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்றில் அதிக ரன் சேர்த்த அணி என்ற சாதனையை தனதாக்கியது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி ( ஒரு சதம், 4 அரைசதத்துடன் 600 ரன்கள்), கேப்டன் ரஜத் படிதார் (5 அரைசதத்துடன் 486), தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 463) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். டிம் டேவிட், வெங்கடேஷ் அய்யரும் கைகொடுக்கின்றனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (26 விக்கெட்), ராசிக் சலாம் (16), ஹேஷில்வுட் (13), ஜேக்கப் டப்பி, சுயாஷ் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குருணால் பாண்டியா (225 ரன்கள், 13 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.

குஜராத் அணி எப்படி?:
2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் ரன்-ரேட்டில் பின்னிலையில் 2-வது இடம் பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி இந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (ஒரு சதம், 6 அரைசதத்துடன் 722 ரன்கள்), சாய் சுதர்சன் (ஒரு சதம், 8 அரைசதத்துடன் 710), ஜோஸ் பட்லர் (4 அரைசதத்துடன் 507), வாஷிங்டன் சுந்தர் (327), ராகுல் திவேதியா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் காகிசோ ரபாடா (28 விக்கெட்), ரஷித் கான் (19), முகமது சிராஜ் (18), ஜேசன் ஹோல்டர் (17), பிரசித் கிருஷ்ணா (16) மிரட்டக்கூடியவர்கள்.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன. முதல் லீக் மற்றும் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவும், 2-வது லீக்கில் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய 3-வது அணி என்ற பெருமையை பெற பெங்களூரு அணியும், 2-வது தடவையாக கோப்பையை சொந்தமாக்க குஜராத் அணியும் கடுமையாக மல்லுக்கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அகமதாபாத்தில் இந்த சீசனில் 7 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி பெற்று இருக்கும் குஜராத் அணிக்கு உள்ளூர் சூழல் சற்று அனுகூலமாக இருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 5-ல் பெங்களூருவும், 4-ல் குஜராத்தும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் கடந்த ஆண்டில் (2025) கோப்பையை வென்ற அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதே பரிசுத்தொகை இந்த சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: விராட் கோலி, வெங்கடேஷ் அய்யர் அல்லது பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), குருணால் பாண்டியா, டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, புவனேஷ்வர் குமார், ஹேஷில்வுட், ராசிக் சலாம், ஜேக்கப் டப்பி அல்லது சுயாஷ் சர்மா.

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ஜேசன் ஹோல்டர், நிஷாந்த் சிந்து, ரஷித் கான், சாய் கிஷோர், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – லீக் சுற்று
* ஐதராபாத்துடன் 5 விக்கெட் வெற்றி
* சென்னையிடம் 43 ரன்னில் வெற்றி
* ராஜஸ்தானிடம் 6 விக்கெட் தோல்வி
* மும்பையுடன் 18 ரன்னில் வெற்றி
* லக்னோவுடன் 5 விக்கெட் வெற்றி
* டில்லியிடம் 6 விக்கெட் தோல்வி
* குஜராத்துடன் 5 விக்கெட் வெற்றி
* டில்லியுடன் 9 விக்கெட் வெற்றி
* குஜராத்திடம் 4 விக்கெட் தோல்வி
* லக்னோவிடம் 9 ரன்னில் தோல்வி
* மும்பையுடன் 2 விக்கெட் வெற்றி
* கொல்கத்தாவுடன் 6 விக்கெட் வெற்றி
* பஞ்சாப்புடன் 23 ரன்னில் வெற்றி
* ஐதராபாத்திடம் 55 ரன்னில் தோல்வி
* *பிளே-ஆப் சுற்று:* முதலாவது தகுதி சுற்றில் குஜராத்துடன் 92 ரன்னில் வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் – லீக் சுற்று
* பஞ்சாபிடம் 3 விக்கெட் தோல்வி
* ராஜஸ்தானிடம் 6 ரன்னில் தோல்வி
* டில்லியுடன் ஒரு ரன்னில் வெற்றி
* லக்னோவுடன் 7 விக்கெட் வெற்றி
* கொல்கத்தாவுடன் 5 விக்கெட் வெற்றி
* மும்பையிடம் 99 ரன்னில் தோல்வி
* பெங்களூருவிடம் 5 விக்கெட் தோல்வி
* சென்னையுடன் 8 விக்கெட் வெற்றி
* பெங்களூருடன் 4 விக்கெட் வெற்றி
* பஞ்சாப்புடன் 4 விக்கெட் வெற்றி
* ராஜஸ்தானுடன் 77 ரன்னில் வெற்றி
* ஐதராபாத்துடன் 82 ரன்னில் வெற்றி
* கொல்கத்தாவிடம் 29 ரன்னில் தோல்வி
* சென்னையுடன் 89 ரன்னில் வெற்றி
* *பிளே-ஆப் சுற்று:*
   * முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரிடம் 92 ரன்னில் தோல்வி
   * 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தானுடன் 7 விக்கெட் வெற்றி.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK