S$673.60 மருத்துவக் கட்டணம்… அதிர்ச்சியில் சிங்கப்பூர் பெண்..!! மருத்துவமனை செய்த தவறு என்ன?

S$673.60 மருத்துவக் கட்டணம்... அதிர்ச்சியில் சிங்கப்பூர் பெண்..!! மருத்துவமனை செய்த தவறு என்ன?

சிங்கப்பூரில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 31 வயது பெண்ணுக்கு, முன்கூட்டியே கட்டணம் தெரிவிக்காமல் CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பரிசோதனைக்குப் பிறகு S$673.60 கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தில் நிர்வாகத் தவறு ஏற்பட்டதை மருத்துவமனையும் ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்து நான்கு மாதங்களே ஆன 31 வயதுடைய மோலி மு (Molly Mu) என்ற பெண்ணுக்கு, நவம்பர் 6ஆம் தேதி பிற்பகல் திடீரென உடல் வலி, பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மயங்கி விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர் அவசர மருத்துவ ஊர்தியை அழைத்துள்ளார். அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரைப் பரிசோதித்தபோது ஆரம்பகட்டப் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இதற்கு முன்பும் அவருக்கு இதேபோன்ற அறிகுறிகள் சிலமுறை ஏற்பட்டிருந்ததால், மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அருகிலுள்ள சாங்கி பொது மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று முதலில் எதிர்பார்த்த அந்தப் பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு குறித்தும் கவலை கொண்டிருந்தார்.

ஆனால், அவசர மருத்துவ ஊர்தியில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளுக்கு ராஃபிள்ஸ் மருத்துவமனையில் அரசாங்க மானியம் கிடைப்பதாகவும், கட்டணம் பொது மருத்துவமனைகளுக்கு இணையாக இருக்கும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி அவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல ஒப்புக்கொண்டார்.

மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். தொடர்ந்து ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் கணினி வழி ஊடுகதிர் படமெடுப்பு (CT Scan) ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், CT ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் குறித்து பரிசோதனைக்கு முன்னதாக யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

அன்றிரவு சுமார் 9 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்காகக் கட்டணம் செலுத்தச் சென்றபோதுதான், அரசாங்க மானியம் வழங்கப்பட்ட பின்னரும் CT ஸ்கேன் பரிசோதனைக்காக S$673.60 செலுத்த வேண்டியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

கட்டணம் குறித்து முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, மருத்துவமனையின் செவிலியர் ஒருவர், அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவார் என்றும், அதற்காக அவரது மெடிசேவ் (MediSave) கணக்கைப் பயன்படுத்திக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்றும் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார்.

இதனால் CT ஸ்கேன் கட்டணம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும் அந்தச் செவிலியர் விளக்கமளித்ததாகப் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுமாறும் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வீட்டில் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் மருத்துவமனையில் தங்க அவர் விரும்பவில்லை. இதனால் தனது வங்கிக் அட்டை மூலம் முழுத் தொகையையும் செலுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

குறிப்பாக, பரிசோதனைக்கான செலவு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், அந்த CT ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஃபிள்ஸ் மருத்துவமனை கூறியதாவது, ஆரம்பத்தில் அந்தப் பெண் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக விளக்கியது.

மருத்துவமனையின் வழக்கமான நடைமுறையின்படி, நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும்போது, CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான செலவுகளும் சேர்த்து மொத்த சிகிச்சைக் கட்டணம் குறித்து நிதிப் பிரிவு விளக்கமளிக்கும்.

ஆனால், அந்தப் பெண் பின்னர் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற மறுத்ததால், CT ஸ்கேன் கட்டணம் அவசர சிகிச்சைப் பிரிவின் கட்டணத்துடன் சேர்க்கப்பட்டது.

இந்த மாற்றத்தின்போது, பரிசோதனைக்கு முன்பாக அதற்கான கட்டணத்தைத் தனியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டதாக மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

மேலும், இந்த நிர்வாகத் தவறுக்காக வருத்தம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட பெண்ணைத் தொடர்புகொண்டு அவரது புகார்களுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தது.

இந்த விவகாரம் தற்போது இருதரப்புக்கும் திருப்தியளிக்கும் வகையில் தீர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனையிடமிருந்து தனக்கான பணம் திரும்பக் கிடைத்துவிட்டதாக அந்தப் பெண்ணும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கான செலவுகள் குறித்து நோயாளிகளுக்குத் தெளிவாகத் தெரிவிப்பது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.