நீச்சல் தெரியாதவர்களும் பங்கேற்கலாம்... சிங்கப்பூரில் அறிமுகமான புதிய கடல்வாழ் அனுபவம்!


சிங்கப்பூர்: வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே கடலுக்கடியில் வாழும் அரிய உயிரினங்களை மிக அருகில் கண்டு ரசிக்கும் புதிய வாய்ப்பு சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் அமைந்துள்ள சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகம் (Singapore Oceanarium), கடல்வாழ் உயிரினங்களை நெருக்கமாகக் காண விரும்புவோருக்காகப் புதிய ஸ்நோர்க்கெலிங் அனுபவத்தை வழங்குகிறது.
அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட PADI (Professional Association of Diving Instructors) அமைப்பின் 5 நட்சத்திரப் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டு முக்குளிப்பு உல்லாசத்தலம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இக்காட்சியகம், ‘PADI Discover Snorkelling’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல்வாழினக் காட்சியகத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நீர்நிலையில் மிதந்தபடி ஸ்நோர்க்கெலிங் செய்யும் அனுபவத்தை வழங்கும் சிங்கப்பூரின் ஒரே திட்டம் இதுவாகும்.
இந்தப் புதிய அனுபவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், முக்குளிப்பிலோ நீச்சலிலோ முன் அனுபவம் இல்லாதவர்கள்கூட இதில் பங்கேற்க முடியும்.
10 வயதை எட்டிய சிறார்களும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து இந்த அனுபவத்தைப் பாதுகாப்பாகப் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்ட பிரம்மாண்டமான நீர்நிலையில் மிதந்தபடி, நீருக்கடியில் வாழும் 120க்கும் மேற்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களைக் காணும் வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கிறது.
குறிப்பாக, மான்டா ரே திருக்கை மீன்கள், சுத்தியல் போன்ற தலையைக் கொண்ட சுறாக்கள், வரிக்குதிரை போன்ற சுறாக்கள், பெரிய குரூப்பர் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் தங்களுக்கு அருகில் நீந்திச் செல்வதைக் காண முடியும்.
இந்த நடவடிக்கையில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளும் மிதவை உடைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், தகுதிபெற்ற பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு நீரில் சுவாசிக்கும் முறை, ஸ்நோர்க்கெலிங் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை விளக்குவார்கள்.
இதன் மூலம் முதல்முறையாக நீரில் இறங்குபவர்கள்கூட பதற்றமின்றி இந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகத்தில் முக்குளிப்பு வல்லுநராகப் பணியாற்றும் 46 வயதான ஜோயல் ராஜேஷ் பிரையன், இந்தத் திட்டம் குறித்துத் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிறுவயதில் தமது தந்தை கூறிய படகுப் பயணக் கதைகள் மற்றும் தேசியச் சேவையின்போது கடற்படையில் பணியாற்றிய அனுபவம் ஆகியவை கடல் மீதான ஆர்வத்தைத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் இந்தோனேசியாவின் பாலித் தீவில் முதன்முறையாக முக்குளிப்பில் ஈடுபட்ட அவர், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தமது ஆர்வத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இத்துறையைத் தேர்ந்தெடுத்தார்.
பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் தண்ணீரைக் கண்டு அஞ்சிய பலருக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடக்கத்தில் நீருக்குள் செல்லவே தயங்கியவர்கள், பின்னர் தங்களது அச்சத்தைக் கடந்து சான்றிதழ் பெற்ற முக்குளிப்பாளர்களாக உயர்வதைக் காண்பது தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொதுவாகக் கடலில் ஸ்நோர்க்கெலிங் அல்லது முக்குளிப்பில் ஈடுபடும்போது எதிர்பாராத நீரோட்டம், அலைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடலாம்.
ஆனால், கடல்வாழினக் காட்சியகத்தின் கட்டுப்படுத்தப்பட்ட நீர்ச்சூழல் தொடக்கநிலையில் இருப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஜோயல் தெரிவித்தார்.
கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படுவோமோ அல்லது வழி தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சமின்றி, பாதுகாப்பான சூழலில் பயிற்சியிலும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிப்பதிலும் பங்கேற்பாளர்கள் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், ஒரே நாளில் தேர்ந்த முக்குளிப்பாளராக மாறிவிட முடியாது என்றும், சிறிய அளவில் தொடங்கி தகுதிபெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் படிப்படியாகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரிலேயே குடும்பத்தினருடன் இணைந்து கடல்வாழ் உயிரினங்களை மிக அருகில் கண்டு ரசிக்க விரும்புவோருக்கு இந்தப் புதிய ஸ்நோர்க்கெலிங் அனுபவம் ஒரு வித்தியாசமான வாய்ப்பாக அமையும்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

