சிங்கப்பூரில் முக்கிய சாலையில் அதிரடி மாற்றம்..!! பார்க்கிங் இடங்கள் அகற்றம்..2027 வரை தொடரும் பணிகள்!


சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் (Tanjong Pagar) சாலையில் போக்குவரத்து வசதிகளையும், பாதசாரிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பெரிய அளவிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் ஒரு பகுதியாகப் புதிய சைக்கிள் பாதைகள், அகலமான நடைபாதைகள் மற்றும் கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படவுள்ளன.
இந்தப் பணிகள் 2026 நவம்பர் மாதம் தொடங்கி, 2027 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிரேக் ரோடு (Craig Road) முதல் டக்ஸ்டன் ஹில் (Duxton Hill) வரையிலான பகுதியில் புதிய சைக்கிள் பாதையும் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக, குக் ஸ்ட்ரீட் (Cook Street) முதல் கிரேக் ரோடு வரையிலான பகுதியில் உள்ள சாலையோர வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்படவுள்ளன.
மேலும், டக்ஸ்டன் ஹில் முதல் மெக்ஸ்வெல் ரோடு (Maxwell Road) வரையிலான பகுதியிலும் புதிய சைக்கிள் பாதை அமைக்கப்படும். தஞ்சோங் பகார் பிளாசா சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்கு அருகிலும் புதிய சைக்கிள் பாதை மற்றும் நடைபாதை உருவாக்கப்படவுள்ளன.
இந்த மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, டக்ஸ்டன் ரோடு (Duxton Road) மற்றும் தஞ்சோங் பகார் ரோடு இடையிலான டக்ஸ்டன் ஹில்லின் ஒரு சிறிய பகுதி, இருவழிப் போக்குவரத்திலிருந்து ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றப்படவுள்ளது.
இதன்படி, வாகனங்கள் தஞ்சோங் பகார் ரோடு வழியாக மட்டுமே வெளியேற முடியும்.
தஞ்சோங் பகார் ரோட்டின் குறுக்கே உயரமான கூரையுடன் கூடிய புதிய நடைபாதை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இது டிராஸ் லிங்க் (Tras Link) மற்றும் தஞ்சோங் பகார் பிளாசா சந்தை, உணவங்காடி நிலையம் அருகே அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரேக் ரோட்டுக்கு முன்பாக அமைந்துள்ள BS05429 என்ற பேருந்து நிறுத்தம், ஆர்க்கிட் ஹோட்டல் (Orchid Hotel) அருகே இடமாற்றம் செய்யப்படும். அந்தப் பேருந்து நிறுத்தமும் மேம்படுத்தப்படவுள்ளது.
பேருந்து நிறுத்தத்திலிருந்து தஞ்சோங் பகார் பிளாசா சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்குச் செல்லும் கூரையுடன் கூடிய நடைபாதையும் நீட்டிக்கப்படும்.
சைக்கிள் பாதைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படும் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள வடிகால் அமைப்புகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்காகச் சில பயன்பாட்டுக் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கும்.
கட்டுமானப் பணிகளுக்காகச் சில மரங்கள் அகற்றப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. சாத்தியமான இடங்களில் பாதிக்கப்படும் மரங்கள் வேறு இடங்களுக்கு மாற்றி நடப்படும் என்றும், பணிகள் நிறைவடைந்த பின்னர் புதிய மரங்கள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் சில சாலைத் தடங்கள் கட்டம் கட்டமாகத் தற்காலிகமாக மூடப்படலாம். இதனால் அந்தப் பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சாலை மூடல் நடவடிக்கைகள் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம், தஞ்சோங் பகார் மற்றும் மெக்ஸ்வெல் ரயில் நிலையங்களுக்கு இடையிலான நடைப்பயண மற்றும் சைக்கிள் பயண இணைப்பை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் பாதசாரிகளும் சைக்கிள் ஓட்டிகளும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

