874 பெண்கள், 3,042 ரகசியக் காணொளிகள்...சிங்கப்பூர் மருத்துவர் வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..!!


ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மூன்று மருத்துவமனைகளில் பணியாற்றியபோது, 874 பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகக் காணொளி பதிவு செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
29 வயதான ராயன் சோ (Ryan Cho), கடந்த நவம்பர் 26ஆம் தேதி மெல்பர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்ற மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு தடுப்புக்காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கான தண்டனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை, மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளைப் பயன்படுத்திய பெண்களை ரகசியமாகக் காணொளி எடுத்துள்ளார். மொத்தம் 874 பெண்களைப் பாதிக்கும் வகையில் 3,042 காணொளிகளைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Peter MacCallum புற்றுநோய் நிலையம், Royal Melbourne மருத்துவமனை மற்றும் Austin மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் அவர் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கம்பிவலைப் பைக்குள் (Mesh Bag) கைத்தொலைபேசியை மறைத்து வைத்து, அதன் மூலம் பெண்களை ரகசியமாகக் காணொளி பதிவு செய்துள்ளார். மேலும், கழிப்பறைகளின் கதவுகளைப் பூட்டுவதிலும் மாற்றங்களைச் செய்ததுடன், மற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத வகையில் இடையூறுகளையும் ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட காணொளிகளைத் தனது மடிக்கணினியில் தனித்தனி கோப்புகளாகப் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் Austin மருத்துவமனையின் ஊழியர் ஒருவர், கழிப்பறையில் துணிகளுடன் வைக்கப்பட்டிருந்த கம்பிவலைப் பையைக் கவனித்துள்ளார். அதற்குள் காணொளி பதிவு செய்யும் நிலையில் கைத்தொலைபேசி இருந்ததைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து ராயன் சோ மீது 900க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் நீதிமன்றத்தில் தங்களது மனவேதனையை வெளிப்படுத்தினர். சிலர் கடுமையான மன உளைச்சல், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு செவிலியர், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பணியிடத்தில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்குக்கூட அச்சப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ராயன் சோவின் மருத்துவப் பதிவு உரிமம் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராயன் சோ தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கான அபாயம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கான இறுதித் தண்டனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

