பாட்டில்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!! 7 மாதங்களில் இத்தனை கோடி பாட்டில்கள் சேகரிப்பு!


சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்ட பானக் கொள்கலன்கள் திரும்பப் பெறும் திட்டத்தின் (Beverage Container Return Scheme – BCRS) மூலம், ஏழு மாதங்களில் 10.5 கோடிக்கும் அதிகமான காலி பாட்டில்கள் மற்றும் கேன்கள் மறுசுழற்சிக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆறு மாத கால இடைக்கால ஏற்பாடுகளுக்குப் பிறகு அக்டோபர் 1ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள மறுசுழற்சி இயந்திரங்களில் மக்கள் வரிசையாகக் காத்திருந்து காலி பாட்டில்கள் மற்றும் கேன்களைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
BCRS திட்டத்தின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 10 கோடியே 55 லட்சத்து 98 ஆயிரத்து 711 பாட்டில்கள் மற்றும் கேன்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பிராந்திய வாரியான மறுசுழற்சி அளவில் மத்தியப் பகுதி 29.9 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது. மேற்குப் பகுதி 24.4 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்திலும், வடகிழக்குப் பகுதி 16.7 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மறுசுழற்சி இயந்திரங்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை காலை நேரங்களில் பாட்டில்கள் மற்றும் கேன்களைத் திருப்பிக் கொடுக்கச் செல்லலாம் என அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இந்த நேரங்களில் பொதுவாக மறுசுழற்சி அளவு குறைவாக இருப்பதால், மக்கள் சிரமமின்றி தங்களது பாட்டில்களைச் செலுத்த முடியும்.
மேலும், மறுசுழற்சி மையங்களுக்குச் செல்வதற்கு முன்பாக, returnright.sg இணையதளத்தின் மூலம் அருகிலுள்ள இயந்திரங்களின் பயன்பாட்டு நிலையைச் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உலோகக் கேன்களை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

