சிங்கப்பூரில் 10 வயது மகனுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை..!! 6 மாதங்கள் சிறை!!

சிங்கப்பூரில் 10 வயது மகனுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை..!! 6 மாதங்கள் சிறை!!

சிங்கப்பூரில் தனது 10 வயது மகனை ஆடைகளைக் கழற்றிவிட்டு, நிர்வாணமாக அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டில் கீழ்தளத்திற்குச் சென்று மீண்டும் மேலே வரும்படி தண்டித்த 40 வயது தந்தைக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது 7 வயது மகளிடம் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்கச் சொன்னதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2025 செப்டம்பர் 8ஆம் தேதி காலை சிங்கப்பூரில் உள்ள எட்டாவது மாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ளது. அப்போது அந்தத் தந்தை தனது 10 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

மகன் பொய் கூறியதாகவும், அதற்காகத் தந்தை அவரைக் கண்டித்தபோது சிறுவன் சிரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகனைத் தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, எட்டாவது மாடியிலிருந்து லிஃப்ட் மூலம் தரைத்தளத்திற்குச் சென்று, மீண்டும் அதே லிஃப்டில் வீட்டிற்குத் திரும்பும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளார். தந்தையின் உத்தரவுக்குப் பயந்த சிறுவனும் அவர் கூறியபடியே செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது தனது 7 வயது மகளிடம், அண்ணன் நிர்வாணமாகச் செல்லும் காட்சிகளை மொபைல் போனில் வீடியோ எடுக்கும்படி தந்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி இரண்டு வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு வீடியோவில் சிறுவன் குடியிருப்பின் பொதுவழிப் பாதையில் நிர்வாணமாக ஓடிச் செல்வதும், மற்றொரு வீடியோவில் லிஃப்டுக்குள் நிர்வாணமாக நிற்பதும் பதிவாகியிருந்தது.

சிறுவன் தரைத்தளத்தை அடைந்தபோது, லிஃப்டுக்குள் வந்த இரண்டு பெண்கள் அவரை நிர்வாணமாகப் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தந்தையைக் கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு, குழந்தைகளை மீண்டும் துன்புறுத்தக் கூடாது என்றும் விசாரணை நடைபெறும் காலத்தில் வேறு குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், காவல்துறையின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு மாதத்திற்குள்ளாகவே மற்றொரு சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

2025 அக்டோபர் 3ஆம் தேதி, தனது மகளுடன் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்தபோது, சிறுமி திடீரென வாந்தி எடுத்துள்ளார். அதற்கான காரணத்தை மகளால் விளக்க முடியாததால் ஆத்திரமடைந்த தந்தை, முதலில் சிறுமியைத் தள்ளியதுடன், அவரது கழுத்தின் பின்பகுதியில் குத்தியுள்ளார்.

பின்னர் இருவரும் ஓய்வெடுக்கும் பகுதியில் அமர்ந்திருந்தபோது, மகளின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் சிறுமியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில், குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்தை 40 வயதான தந்தை ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தைகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரது பெயரை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மகனைப் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாகச் செல்ல வைத்தது திட்டமிட்டு செய்யப்பட்ட அவமானப்படுத்தும் செயல் என்றும், குழந்தைகள் பெற்றோரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் மீறியுள்ளதாகவும் அரசுத் தரப்பு வாதிட்டது.

மேலும், மகனுக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பு உண்மையானது என்றும், மகளைத் தனது சகோதரனை அவமானப்படுத்தும் செயலிலும் ஈடுபடுத்தியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அந்த வீடியோ எதிர்காலத்தில் சிறுவனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய நிரந்தரப் பதிவாக மாறலாம் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

அரசுத் தரப்பு 9 மாதங்கள் சிறைத் தண்டனை கோரிய நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டது உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 26, 2026 இன்று அந்த நபருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது 15,000 சிங்கப்பூர் டாலர் பிணையில் உள்ள அவர், வரும் டிசம்பர் 1ஆம் தேதி சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.