சிங்கப்பூர் கேலாங்கில் பயங்கர தீ விபத்து!! 5-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!!

சிங்கப்பூர் கேலாங்கில் பயங்கர தீ விபத்து!! 5-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!!

சிங்கப்பூரின் கேலாங் (Geylang) பகுதியில் அமைந்துள்ள ஹுய் ஆன் சங்கக் (Singapore Hui Ann Association) கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில், கேலாங் லோரோங் 29 பகுதியில் உள்ள 7-ஆம் எண் முகவரியில் அமைந்துள்ள ஹுய் ஆன் சங்கக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்து கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்த அலமாரி (Shelf) ஒன்றில் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் காவல்துறையினரும், குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ காட்சிகளில், குறைந்தது 8 அவசரகால மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது.

மேலும், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகக் கட்டிடத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் குறைந்தது 10 தீயணைப்புக் கருவிகள் (Fire Extinguishers) கட்டிடத்திற்கு எதிரே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், தீயணைப்புக் குழாய் (Fire Hose) மற்றும் சுருக்கப்பட்ட காற்று நுரை கருவி (Compressed Air Foam – CAF) ஆகியவற்றைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேலாங் பகுதியில் உள்ள சங்கக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.