சிங்கப்பூரில் SCDF ஊழியர்களுக்கு தொடரும் தாக்குதல்..!! இந்த ஆண்டில் மட்டும் 46 புகார்கள் பதிவு..!!


சிங்கப்பூரில் அவசர உதவிப் பணிகளில் ஈடுபடும் சிவில் தற்காப்புப் படை (SCDF) முன்னணி ஊழியர்களைத் தாக்குவது மற்றும் தகாத வார்த்தைகளால் அவமதிப்பது தொடர்பாக, இந்த ஆண்டில் இதுவரை 46 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் சிவில் தற்காப்புப் படை (SCDF),இன்று நவம்பர் 27-ம் தேதி வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜனவரி முதல் தற்போது வரை முன்னணி ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் தகாத நடத்தை தொடர்பாக 46 புகார்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவசர மருத்துவ உதவி வழங்கச் சென்ற ஊழியர்களைத் தாக்கிய இரண்டு நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், அவசர மருத்துவ சேவையில் தொழில்நுட்ப உதவியாளராகவும் ஓட்டுநராகவும் பணியாற்றிய ஒருவரைத் தொடர்ந்து காலால் உதைத்த நபருக்கு 1 ஆண்டு மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல், ஆகஸ்ட் மாதம் இரண்டு அவசர மருத்துவப் பணியாளர்களின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் காலால் உதைத்த மற்றொரு நபருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்தில், மருத்துவ உதவி வழங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்த நபருக்கு 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2025-ம் ஆண்டில் SCDF படையினர் தினமும் சராசரியாக 700 அவசர மருத்துவ உதவி அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளனர்.
ஒவ்வொரு அவசர அழைப்பும் முக்கியமானது என்றும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் SCDF தெரிவித்துள்ளது.
ஆனால், முன்னணி ஊழியர்கள் மீது நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் வாய்மொழி அவமதிப்புகள் அவர்களின் பணியைப் பாதிப்பதாகவும், அவசர நேரங்களில் பொதுமக்களுக்கு உதவுவதில் தடையை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.
அரசுப் பணியாளர் ஒருவர் தனது கடமையைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில் அவரை வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்தினால், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், அபராதம் அல்லது பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்னணி ஊழியர்களுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்கமாட்டோம் என்றும் SCDF திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அவசரகாலப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

