சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!!71 வயது மூதாட்டியிடம் S$9,000 பறிப்பு – 2 மலேசியர்கள் கைது!!


சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த சம்பவத்தில் இரண்டு மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 71 வயது மூதாட்டியிடம் சுமார் S$9,000 மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறையினருக்கு கடந்த நவம்பர் 23-ஆம் தேதி இந்த மோசடி தொடர்பாக புகார் கிடைத்துள்ளது. 71 வயதுடைய மூதாட்டியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும், மூதாட்டியின் அடையாளத்தைப் பயன்படுத்தி யாரோ வங்கிக் கணக்கு தொடங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரிடம் உள்ள பணம் மற்றும் நகைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு நபரிடம் தொலைபேசி அழைப்பு மாற்றப்பட்டுள்ளது. அவரும் தன்னை MAS அதிகாரி எனக் கூறி, மூதாட்டி பணமோசடி வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக போலியான நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் காட்டி, அவரிடம் உள்ள சொத்துகளை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய மூதாட்டி, அன்றைய தினமே சுமார் S$9,000 மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை வந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், 39 வயதுடைய மலேசியர் ஒருவர் நவம்பர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து S$9,000 ரொக்கப் பணம் மீட்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்த 33 வயதுடைய மற்றொரு மலேசியரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து S$35,000 ரொக்கப் பணம் மற்றும் இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், 39 வயது நபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைச் சேகரித்து, மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், 33 வயது நபர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றிருந்த பணக் கடத்தல்காரர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த ஆதாயங்களை மற்றொருவர் தக்கவைத்துக்கொள்ள உதவியதாகவும், அதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், மோசடி பணத்தைச் சுத்திகரிக்க உதவும் பணக் கடத்தல்காரர்களுக்கு குறிப்பிட்ட குற்றங்களின் கீழ் அதிகபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் ஒருபோதும் தொலைபேசி வாயிலாகப் பணம் அனுப்புமாறு கேட்கமாட்டார்கள். வங்கிக் கணக்கு உள்நுழைவு விவரங்களையும் கேட்கமாட்டார்கள்.
எனவே, அரசு அதிகாரிகள் எனக் கூறி யாராவது பணம் அல்லது நகைகளைக் கேட்பதுடன், விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வற்புறுத்தினால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பைத் துண்டித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மோசடி தொடர்பான சந்தேகங்களுக்கு சிங்கப்பூரின் 24 மணி நேர ScamShield உதவி எண்ணான 1799-ஐத் தொடர்புகொள்ளலாம்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK

