கடனை வசூலிக்கச் சென்ற அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன தெரியுமா..?
கம்போடியா: கம்போடியாவில் ஒரு கடன் வசூல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடனை வசூலிக்கச் சென்ற பெண் ஊழியர் ஒருவர், கடனாளியால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் 22 வயதான ஹெண்டினா என அடையாளம் காணப்பட்டார். அவர் கம்போங் தோம் மாகாணத்தைச் சேர்ந்தவரும், ஒரு நுண்நிதி நிறுவனத்தில் பணியாற்றுபவருமாவார்.
விசாரணையில், நவம்பர் 13ஆம் தேதி மதியம் ஹெண்டினா 20 வயது மான்சியர் என்ற நபரின் வீட்டிற்கு கடனை வசூலிக்கச் சென்றுள்ளார். அதன்பிறகு அவரது குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் இல்லை. பல முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வியடைந்ததால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
அடுத்த நாள் காலை ஹெண்டினாவின் தந்தை மான்சியரின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வீட்டின் பின்னால் புதிதாக தோண்டப்பட்ட ஒரு குழி இருந்தது. அதில் கற்கள், துத்தநாகக் கட்டிகள் மற்றும் ஒரு தண்ணீர் தொட்டி இருந்ததை அவர் கவனித்து போலீசுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தோண்டியபோது, அந்தக் குழிக்குள் ஹெண்டினாவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் தற்போது வழக்கை முழுமையாக விசாரித்து வருவதாகவும், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
கம்போடிய நுண்நிதி சங்கத்தின் தகவலின்படி, ஹெண்டினா பணிபுரிந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ நுண்நிதி நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. இதனால், அவர் ஒரு உரிமம் பெறாத தனியார் கடன் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம், கடன் வசூல் துறையில் பணிபுரியும் பலரிடமும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.