OCBC வங்கிச் செயலியில் அறிமுகம் காணும் புதிய அம்சம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வயதான வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, OCBC வங்கி தனது மொபைல் செயலியில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், பயனர்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் உள்ள எழுத்துருக்களின் அளவை தங்களுக்கேற்ப பெரிதாக்க முடியும்.
வயதான வாடிக்கையாளர்கள் சிறிய எழுத்துருக்களை வாசிக்க சிரமப்படுவது மற்றும் தவறுகளைச் செய்யும் பயம் காரணமாக, ஆன்லைன் வங்கிச் சேவையைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதனை மாற்றும் நோக்கில், OCBC வங்கியின் சுமார் 100 உறுப்பினர்கள்-பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் என ஒரு வருடத்துக்கும் மேல் பணியாற்றி இந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் “இருப்பு”, “பணப் பூட்டு” மற்றும் “ஸ்கேன்-டு-பே” போன்ற அம்சங்களை மேலும் எளிமையாக அணுகக்கூடிய வகையில் செயலி மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.
OCBC வங்கி தற்போது அதன் செயலியில் உள்ள பயன்பாட்டு இடைமுகத்தின் சுமார் 70% புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மாற்றங்கள் 2025 முதல் பாதியில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது பல வங்கிச் செயலிகளில் எழுத்துரு அளவை மாற்றும் விருப்பம் இல்லாத நிலையில், OCBC வங்கியின் இந்த முன்னெடுப்பு மற்ற வங்கிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.