வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்!
வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் ஏஜெண்டுகளிடம் ஏமாந்து பணத்தையும், காலத்தையும் இழக்கின்றனர். நீங்கள் வெளிநாடு செல்லும் முன் கவனிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.
1. “பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லாதீர்கள்! எப்படியாவது வெளிநாடு போக வேண்டும் என்ற அவசரத்தில், ஏஜெண்டுகளிடம் “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், வேலையை மட்டும் முடித்துக் கொடுங்கள்” என்று ஒருபோதும் கூறாதீர்கள். இப்படிச் சொன்னால், சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு அதிகத் தொகையை உங்களிடமிருந்து வசூலித்து ஏமாற்ற வாய்ப்புள்ளது.
2. “எந்த வேலை என்றாலும் ஓகே” – இந்த வார்த்தை ஆபத்தானது! வெளிநாட்டு வேலை என்பது உடல் உழைப்பு அல்லது மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். உங்களால் செய்ய முடியாத ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அங்கு ஒரு நாள் கூட உழைக்க முடியாது. நீங்கள் வேலை செய்ய முடியாமல் திரும்ப வந்தால் உங்களுடைய பணத்தை ஒரு சில ஏஜெண்டுகள் தர மாட்டார்கள். எனவே, உங்கள் அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்.
3.ஆவணங்களை (Documents) அனைவரிடமும் பகிராதீர்கள்! உங்கள் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்தால், உங்கள் அனுமதி இல்லாமலேயே ஏஜெண்டுகளால் விசா விண்ணப்பிக்க முடியும். பின்னர் அந்த வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உங்களை வற்புறுத்தி பணம் கேட்பார்கள். எனவே, நம்பிக்கையான நபர்களிடம் மட்டும் ஆவணங்களைக் கொடுங்கள்.
4. முன்பே முழுத் தொகையையும் கட்டாதீர்கள்! விசா (IPA) வருவதற்கு முன்போ அல்லது விமான டிக்கெட் உறுதியாவதற்கு முன்போ முழுத் தொகையையும் ஏஜெண்டிடம் கொடுக்காதீர்கள். பல மாதங்கள் ஆகியும் விசா வராமல் பலர் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.
5. விசாவைச் சரிபார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம்! இப்போது போலியான விசாக்கள் (Fake Visas) அதிகம் புழக்கத்தில் உள்ளன. நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ குடிவரவுத் துறை இணையதளத்தில் (எ.கா: சிங்கப்பூருக்கு MOM தளம்) உங்கள் விசா உண்மையானதா என்று சரிபார்த்த பின்னரே பணத்தை வழங்க வேண்டும்.
6.சுற்றுலா விசாவில் (Tourist Visa) வேலைக்குச் செல்லாதீர்கள்! சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்வது சட்டவிரோதமானது. அங்கு ஏதேனும் ஆபத்து அல்லது நீங்கள் காணாமல் போனால், இந்திய தூதரகத்தால் உங்களைக் கண்டுபிடிப்பது கடினம். முறையான ஒர்க் விசா (Work Visa) மூலம் மட்டுமே செல்வது பாதுகாப்பானது.
7. போன உடனேயே திரும்பி வரும் எண்ணத்தைத் தவிர்க்கவும்! புதிய நாடு, புதிய சூழல் என்பதால் ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் “என்னால் முடியாது” என்று திரும்பி வருவது உங்கள் வாழ்க்கையையும், பணத்தையும் பாதிக்கும். அந்தச் சூழலுக்குப் பழக உங்கள் உடலுக்கும் மனதுக்கும் சிறிது காலம் அவகாசம் கொடுங்கள்.
வேலைக்குச் செல்லும் முன் கீழ்க்கண்ட விபரங்களை தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: 📌இது உரிமம் பெற்ற ஏஜென்சியா? 📌வேலை நேரம் மற்றும் சம்பளம் எவ்வளவு? 📌தங்குமிடம் மற்றும் உணவு யார் பொறுப்பு? 📌ஓவர்டைம் (OT) ஊதியம் எவ்வளவு? 📌விசா காலம் எவ்வளவு?
இது போன்ற கேள்விகளை தெளிவாக கேட்டு அதற்கான விளக்கம் பெற்று கொண்டு அதன் பின் வெளிநாடு செல்வது சிறப்பு!இந்த எட்டுக் குறிப்புகளையும் சரியாகப் பின்பற்றினால், நீங்கள் ஏமாறாமல் பாதுகாப்பாக வெளிநாடு சென்று உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். அவசரப்பட்டு முடிவெடுத்து உங்கள் உழைப்பை மற்றும் பணத்தை வீணாக்காதீர்கள்.