சிங்கப்பூர்: நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் உணவை வீணாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இணையத்தில் பரவி வரும் காணொளி இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
அந்தக் காணொளியில், ‘Lo Hei’ எனப்படும் பாரம்பரிய சீன புத்தாண்டு உணவை மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிலர் மேடையில் ஏறி உணவை கீழே தூக்கி வீசுவதும், மற்றவர்கள் மேலே எறிவதும் தென்படுகிறது.
இந்தச் சம்பவம் மாணவர் விடுதியில் நடைபெற்ற சீன புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய உணவாகக் கருதப்படும் ‘Lo Hei’க்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பல இணையவாசிகள் கொந்தளித்து பதிவிட்டனர்.
மேலும், இத்தகைய செயலால் துப்புரவுப் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கவலையும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. உணவை வீணாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு பதிலளித்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உணவு வீணாவதை சகித்துக்கொள்ளப் போவதில்லை என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.