90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!!
கேரளத்தைச் சேர்ந்த கொல்லக்காயில் தேவகி அம்மா, 3,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள ஒரு காட்டையே தனி மனுஷியாய் உருவாக்கி சாதித்துள்ளார்.மூத்த குடிமகளான இவர் 90 வயதைக் கடந்தவர். தேவகி அம்மா, வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பையே, புதிய அத்தியாயத்துக்கான தொடக்கமாக மாற்றிவிட்டார்.
விவசாய ஆர்வம்: தேவகி அம்மா, தனது தாத்தா வயலில் உழைப்பதைப் பார்த்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டார். ஆசிரியராகப் பணிபுரிந்த கோபால கிருஷ்ண பிள்ளை என்பவரை மணந்த தேவகி அம்மா, கணவர் வீட்டு நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டார்.
விபத்தால் ஏற்பட்ட திருப்பம்: கடந்த 1980-ம் ஆண்டு, தேவகி அம்மா ஒரு கார் விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அவர் 3 ஆண்டுகள் படுத்த படுக்கையாக ஆனார். பின்னர் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும், முன்பு போல அவரால் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. எனவே அவர், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.
40 ஆண்டுகால உழைப்பு: தேவகி அம்மா, தன் வாழ்நாளில் 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளைச் செலவழித்து, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்திருக்கிறார்.
அவற்றில் மா, வேம்பு, புளி போன்ற பொதுவான மரங்கள் முதல், சாதாரணமாக காண்பதற்கு அரிய மர வகைகளும் அடக்கம். என்றும் வற்றாத குளங்களும் இந்த காட்டுக்குள் உண்டு.
தேவகி அம்மா, பெரும்பாலும் பிற நபர்களின் துணையின்றி தனி மனுஷியாய் இந்தக் காட்டை உருவாக்கியிருப்பதுதான் சாதனை. அவருக்கு துணையாய் இருந்தவை, வீட்டில் உள்ள பசுக்கள், காளைகள் மற்றும் எருமைகள்தான்.
தண்ணீர் ‘தீர்வு’: தனது மரங்களை வளர்ப்பதற்கான தண்ணீருக்கான தீர்வாக, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளையும் தேவகி அம்மா ஏற்படுத்தியிருக்கிறார்.
பறவைகள் சரணாலயம்: ‘தேவகி அம்மா காடு’ (இப்படித்தான் அழைக்கிறார்கள்), இன்று ஒரு பறவைகள் சரணாலயமாகவே மாறிவிட்டது. இங்கு வரும் அரிய பறவைகளைக் காண்பதற்காக பொதுமக்கள் இங்கு குவிகிறார்கள்.
பெற்ற விருதுகள்: சுற்றுச் சூழலைக் காக்கும் சிறந்த பணிக்காக, தேவகி அம்மாவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்கி கௌரவித்தார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் இவருக்கு, ‘இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசு, ஆலப்புழா மாவட்ட அரசு மற்றும் பல அமைப்புகளாலும் இவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தேவகி அம்மாவின் வார்த்தை: “ஒரு காட்டை உருவாக்குகிறோம் என்ற எண்ணமே இல்லாமல், என் கையில் கிடைத்த கன்றுகளை எல்லாம் நட்டு வளர்த்தேன். அது இன்று ஒரு வனமாகி இருக்கிறது. இது எனக்குப் பின்னாலும் இருக்கும், என்றென்றும், எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்பதே என் மகிழ்ச்சி!”