மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு முகமை விடுத்த எச்சரிக்கை.!!
சிங்கப்பூரில் 3 வகையான உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றவும், விற்பனை செய்வதை நிறுத்தவும் உணவு முகமை (SFA) உத்தரவிட்டுள்ளது.
நேற்று(ஆகஸ்ட் ) சிங்கப்பூர் உணவு முகமையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, அந்தப் பொருள்களில் ஒன்றான, ‘பி சொல்யூஷன் ஹனி (திரவம்)’ எனப்படும் மலேசியத் தேன் தயாரிப்பில், விறைப்புத்தன்மைக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருந்தான டடலாஃபில் என்ற திரவம் இருப்பது தெரியவந்துள்ளது.
டடலாஃபிலை மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாரடைப்பு, பக்கவாதம், தலைவலி, இதயத்துடிப்பு ஒழுங்கின்மை மற்றும் பிரியாபிசம் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை அது தரக்கூடும்.
மேலும் நைட்ரேட் அடங்கிய மருந்துகளை எடுத்துக்கொள்ளும் இதய நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான இரத்த அழுத்தக் குறைவை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களையும் இது ஏற்படுத்தும்.
மேலும் தைவானைச் சேர்ந்த ஷாயோ – கே சியான் லி 365 எஸ்1 தாவர பானக்கலவை பார்லி நாற்றுப் பொடியில், மலச்சிக்கலைப் போக்கப் பயன்படும் செனோசைடுகள் என்ற மருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செனோசைடுகளின் பொதுவான பக்க விளைவுகளில் வயிற்று வலி, தசைப்படிப்புகள், வயிற்றுப்போக்கு,பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்புகள் ஆகியவை அடங்கும்.
இதனை பயன்படுத்துவதால் மங்கலான பார்வை, அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, மாதவிடாய் ஒழுங்கின்மை, தலைவலி, குஷிங்ஸ் போன்ற நோய்களும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது மனநலக் கோளாறுகள், மாயத்தோற்றங்கள், மற்றும் எலக்ட்ரோலைட் மற்றும் திரவ சமநிலையின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
சிங்கப்பூர் உணவு முகமை(SFA), விற்பனையார்களுடன் இணைந்து அந்தப் பொருளைக் கடைகளில் இருந்து அகற்றவும் உடனடியாக விற்பனைகளை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பொருளை வாங்கிய நுகர்வோர் அதனை உட்கொள்ள வேண்டாம் என்று என்று SFA அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே உட்கொண்டவர்கள் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், உடனடியாக மருத்துவரை அணுகலாம் எனவும் கூறியுள்ளனர்.
மேற்கூறிய உணவுப் பொருட்களின் விற்பனை அல்லது விநியோகம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் www.sfa.gov.sg/feedback என்ற உணவு பணியகத்தின் இணையதளம் மூலம் தகவல்களை வழங்கலாம்