சிங்கப்பூரில் பள்ளிச் சிறுமி மீது மோதவிருந்த ஓட்டுநர் இல்லாத பேருந்து!! நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை!!

சிங்கப்பூரில் பள்ளிச் சிறுமி மீது மோதவிருந்த ஓட்டுநர் இல்லாத பேருந்து!! நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை!!

சிங்கப்பூரின் புங்கோல் பகுதியில் ஓட்டுநர் இல்லாத ஷட்டில் பேருந்து ஒன்று பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் எரிந்துகொண்டிருந்தபோதும் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாலையைக் கடக்க முயன்ற பள்ளிச் சிறுமி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

SGRV ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் டாஷ்கேம் வீடியோவின்படி, இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 5) காலை சுமார் 8:11 மணியளவில் புங்கோல் ஃபீல்ட் வாக் சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.

கிராப் (Grab) மற்றும் சீனாவைச் சேர்ந்த தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடு (WeRide) ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டில் இயங்கும் ஓட்டுநர் இல்லாத ஷட்டில் பேருந்து ஒன்று அந்தச் சந்திப்பில் இடதுபுறம் திரும்புவதற்காக வந்துள்ளது. அப்போது பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் எரிந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் பள்ளிச் சீருடை அணிந்து, முதுகில் புத்தகப் பையைச் சுமந்துகொண்டிருந்த சிறுமி ஒருவர் சாலையைக் கடக்கத் தயாராக இருந்தார். ஆனால், இடதுபுறம் திரும்பிய ஓட்டுநர் இல்லாத ஷட்டில் பேருந்து வேகத்தைக் குறைத்தபோதிலும் முழுமையாக நிற்காமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதனால் சிறுமி மீது பேருந்து மோதும் அபாயம் ஏற்பட்டது. இருப்பினும், நிலைமையை உணர்ந்த சிறுமி உடனடியாக நின்று சில அடிகள் பின்னோக்கிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறுமி சற்று தாமதித்திருந்தாலோ அல்லது கவனிக்காமல் முன்னோக்கிச் சென்றிருந்தாலோ நிலைமை விபரீதமாக மாறியிருக்கக்கூடும்.

இந்தச் சந்திப்பு விருப்பத்திற்கேற்ப இடதுபுறம் திரும்ப அனுமதிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். இத்தகைய சந்திப்புகளில் ஓட்டுநர்கள் இடதுபுறம் திரும்புவதற்கு முன்பு சாலையின் நிலைமையைச் சரிபார்த்து, பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக, பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் எரியும்போது சாலையைக் கடக்கும் அல்லது கடக்கத் தொடங்கும் பாதசாரிகளுக்கு வாகனங்கள் கட்டாயம் வழிவிட வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்த வீடியோவின் கீழ் 360க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவாகியுள்ளன.

சிலர் ஓட்டுநர் இல்லாத வாகனங்களில் பயன்படுத்தப்படும் சென்சார் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளிச் சிறுமி போன்ற பாதசாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே வாகனத்தை முழுமையாக நிறுத்தும் வகையில் தொழில்நுட்பம் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சிலர், இதுபோன்ற தானியங்கி வாகனங்களால் உண்மையிலேயே விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். வாகனத்தை இயக்கும் நிறுவனமா, தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனமா அல்லது சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஷட்டில் பேருந்தை இயக்கும் நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் விசாரணைகள் அனுப்பப்பட்டுள்ளன.