சொந்த தங்கையையே சித்திரவதை செய்து கொன்ற அண்ணன்!! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் தனது 19 வயது சகோதரியை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில், 34 வயதான ஹுவாங் போக்கனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது முதலாளியின் காதலியான பெண் பயிற்றுவிப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளருடன் இணைந்து சகோதரியைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்யச் சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
19 வயதான ஹுவாங் பாயிங், தனது சகோதரர் ஹுவாங் போக்கனைப் பின்தொடர்ந்து ஹெர்பாலைஃப் தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனத்தில் இணைந்திருந்தார். அங்கு சீ மேய் வான் என்ற பெண் பயிற்றுவிப்பாளரிடம் தயாரிப்பு சந்தைப்படுத்தல் மற்றும் எடை மேலாண்மை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றார். ஆனால், எதிர்பாராத விதமாக தனது சகோதரர் உள்ளிட்ட மூவரின் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்தார்.
2021 மே 5ஆம் தேதி உயிரிழந்த ஹுவாங் பாயிங், இறப்பதற்கு முன்பு வெறும் 27.6 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளார். சம்பவத்திற்கு 11 மாதங்களுக்கு முன்பு சுமார் 47 கிலோ எடை இருந்த நிலையில், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, செப்சிஸ் மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட தாக்குதல் காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சம்பவம் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளரான லிம் பெங் தியோங்கிற்கு இந்த ஆண்டு மே மாதம் 14 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான சீ மேய் வானின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஹுவாங் போக்கன், அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றாலும், குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, அவரைக் கொலைச் சதி செய்த குற்றவாளியாக அறிவித்த நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார்.
தண்டனை அறிவிக்கப்பட்டபோது, தனது தங்கையைப் பாதுகாக்கத் தவறியதற்காக பிரதிவாதி வருந்துவதாகவும், தனது செயல்களுக்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டியிருக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அவருக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்கவும், பிரம்படி தண்டனையைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கைத் துயரமான சம்பவம் என்று குறிப்பிட்ட நீதிபதி, தனது சகோதரனை நம்பியிருந்த இளம்பெண், அவராலேயே கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “நீ உன் சகோதரிக்குச் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருப்பாய் என்று நம்புகிறேன்” என்று உருக்கமாகக் கூறினார்.
தீர்ப்பைக் கேட்ட பிரதிவாதியின் பெற்றோர் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மகளின் உயிரிழப்பும், மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையும் அவர்களை நிலைகுலையச் செய்தது. விசாரணைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர்கள், தொழிற்சாலையில் வேலை செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், தங்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சுமார் ஓராண்டு அவர்களைத் தேடியதாகவும், அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினர். அந்த நேரத்தில் பெண் பயிற்றுவிப்பாளர் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தொடர்ந்து தெரிவித்ததாகவும், இத்தகைய துயரமான சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.
இறுதியாக, வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றும், குழந்தைகள் வளரும்போது அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
