AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!!
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் வேலைவாய்ப்பு சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் AI பயன்பாடு அதிகரித்து வருவதால், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக வலைதள பதிவின் மூலம் இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால், ஆண்டுதோறும் வேலை தேடி வரும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
Zoho உள்ளிட்ட பல IT நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்யவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக புதிய பணியமர்த்தல் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது IT துறையில் புதிய வாய்ப்புகள் குறைந்து வருவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல நிறுவனங்கள் தற்போது புதிய ஊழியர்களை அதிக அளவில் பணியில் அமர்த்துவதைவிட, AI தொழில்நுட்பம், Automation மற்றும் Data Centre கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இதன் மூலம் குறைந்த மனிதவளத்துடன் அதிக உற்பத்தித் திறனைப் பெற முடிவதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் மந்தமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
AI தொழில்நுட்பம் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்றாலும், அதன் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சி அதே அளவில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆரம்பநிலை IT பணிகளில் AI-யின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இளைஞர்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்வது அவசியமாகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு AI மட்டும் போதுமானதாக இருக்காது என்றும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய புதிய தொழில்துறைகள் உருவாக வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தித் துறை, ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி, பசுமை ஆற்றல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கப் போகும் துறை எது என்பதே தற்போது நாட்டின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதற்கான நீண்டகால திட்டமிடல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் அவசியம் என ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.